விநாயகர் சதுர்த்தி பண்டிகையையொட்டி தசரா யானைகளுக்கு இன்று சிறப்பு பூஜை
|விநாயகர் சதுர்த்தி பண்டியையையொட்டி மைசூருவில் தசரா யானைகளுக்கு இன்று (திங்கட்கிழமை) சிறப்பு பூஜை அரண்மனை மண்டலி சார்பில் நடக்கிறது.
மைசூரு
தசரா விழா
மைசூருவில் ஆண்டுதோறும் விஜயதசமி பண்டிகையையொட்டி தசரா விழா கொண்டாடப்பட்டு வருகிறது. 10 நாட்கள் நடைபெறும் தசரா விழா உலகப்பிரசித்தி பெற்றதாகும். இந்த ஆண்டு தசரா விழா அடுத்த மாதம் (அக்டோபர்) 15-ந் தேதி தொடங்கி 24-ந்தேதி வரை நடக்கிறது.
இந்த 14 யானைகள் பங்கேற்கின்றன. முதல் கட்டமாக கடந்த 5-ந் தேதி 9 யானைகள் உன்சூர் தாலுகா வனப்பகுதியில் இருந்து மைசூரு அரண்மனை வளாகத்திற்கு அழைத்து வரப்பட்டன.
அங்கு யானைகளுக்கு நடைபயிற்சி, உடல் பரிசோதனை தினமும் நடத்தப்பட்டு வருகிறது. மேலும் தங்க அம்பாரியை சுமந்து செல்லும் அபிமன்யு யானை உள்பட 3 யானைகளுக்கு பாரம் சுமந்து செல்லும் பயிற்சியும் அளிக்கப்படுகிறது.
2-ம் கட்ட யானைகள்
இந்தநிலையில் 2-ம் கட்டமாக வருகிற 25-ந் தேதி 5 யானைகள் மைசூருக்கு அழைத்து வரப்படுகிறது. இதில் 2 யானைகள் தசரா விழாவில் முதல் முறையாக பங்கேற்கிறது. இந்தநிலையில் இன்று (திங்கட்கிழமை) விநாயகர் சதுர்்த்தி பண்டிகை கொண்டாடப்படுகிறது.
இதையொட்டி அரண்மனை வளாகத்தில் உள்ள 14 யானைகளுக்கு அரண்மனை மண்டலி மற்றும் தசரா விழா கமிட்டி சார்பில் சிறப்பு பூஜைகள் நடக்கிறது. காலை அனைத்து யானைகளும் குளிப்பாட்டபட்டு மலர் மாலைகளால் அலங்கரிக்கப்பட்டு பராம்பரிய முறைப்படி அரண்மனை அர்ச்சகர் பூஜை செய்வார்.
இந்த நிகழ்ச்சியில் மாவட்ட கலெக்டர் ராஜேந்திர பிரசாத், மாவட்ட வனத்துறை அதிாரி சவுரப் குமார், அரண்மனை மண்டல இயக்குனர் சுப்பிரமணியன், மைசூரு மாநகராட்சி மேயர் சிவகுமார், கமிஷனர் ரகுமான் செரீப் உள்பட பலர் கலந்து கொள்கிறார்கள்.
நிகழ்ச்சிகள் ரத்து
இதுகுறித்து மாவட்ட பொறுப்பு மந்திரி எச்.சி. மகாதேவப்பா கூறுகையில், கடந்த மாதம் முதல்-மந்திரி சித்தராமையா தலைமையில் நடந்த தசரா உயர் குழு கமிட்டி கூட்டத்தில் தசரா விழாவை ஆடம்பரமாக கொண்டாட முடிவு செய்யப்பட்டது.
இந்தநிலையில் இந்த ஆண்டு கர்நாடகத்தில் தென்மேற்கு பருவமழை பெய்யாததால் வறட்சி ஏற்பட்டுள்ளது.
இதனால் மக்களின் வரிப்பணம் வீணாக கூடாது. எனவே தசரா விழாவில் முக்கியமான நிகழ்ச்சிகளை மட்டும் வைத்து கொண்டு மற்ற நிகழ்ச்சிகளை ரத்து செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது.
தசரா நிழச்சியின் முதல் நாளில் மலர் கண்காட்சி, தசரா கண்காட்சி, தசரா திரைப்பட உற்சவம், குஸ்தி போட்டி, விளையாட்டு போட்டிகள், புத்தக கண்காட்சி, இளைஞர் தசரா, போலீஸ் கார்களின் சாகச நிகழ்ச்சியான தீப்பந்து விளையாட்டு போன்ற நிகழ்ச்சிகள் நடக்கின்றன.
இதனை காண அதிகளவில் சுற்றுலா பயணிகள் குவிவார்கள் என்பதால் வழக்கம் போல் பொதுமக்களை கவரும் வகையில் மின் விளக்கு அலங்காரம் செய்யப்பட்டு வருகிறது.
இவ்வாறு மந்திரி கூறினார்.