< Back
தேசிய செய்திகள்
மைசூருவில் நாளை தசரா ஊர்வலம்; முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை தொடங்கி வைக்கிறார்
தேசிய செய்திகள்

மைசூருவில் நாளை தசரா ஊர்வலம்; முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை தொடங்கி வைக்கிறார்

தினத்தந்தி
|
4 Oct 2022 12:15 AM IST

அலங்கார ஊர்திகள், கலை குழுவினரின் அணிவகுப்புடன் மைசூருவில் தசரா ஊர்வலம் நாளை (புதன்கிழமை) நடக்கிறது. இந்த ஊர்வலத்தை முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை தொடங்கி வைக்க உள்ளார்.

மைசூரு:

மைசூரு தசரா விழா

கா்நாடக மாநிலம் மைசூருவில் நடைபெறும் தசரா விழா உலக புகழ்பெற்றது. இது நவராத்திரி மற்றும் விஜயதசமியையொட்டி 10 நாட்கள் கோலாகலமாக நடைபெறும் விழாவாகும். தசரா விழா நன்மைக்கும், தீமைக்கும் நடைபெறும் போட்டியாக கருதப்படுகிறது. கர்நாடக காவல் தெய்வமாக கருதப்படும் சாமுண்டி மலையில் வீற்றிருக்கும் சாமுண்டீஸ்வரி அம்மன், மகிஷாசூரனை வதம் செய்த நாள்தான் விஜயதசமி நாளாகவும், தசரா விழாவாகவும் கொண்டாடப்பட்டு வருவதாக கூறப்படுகிறது.

கடந்த 1610-ம் ஆண்டு விஜயநகர பேரரசு காலத்தில் மன்னர் நால்வடி கிருஷ்ணராஜ உடையாரால் ஸ்ரீரங்கப்பட்டணாவில் மகாநவமியையொட்டி தசரா விழா கொண்டாடப்பட்டது. அதன்பின்னர் மைசூருவை ஆட்சி செய்த யது வம்ச மன்னர்களால் தசரா விழா நடத்தப்பட்டு வந்தது. தற்போது மைசூரு தசரா விழா கர்நாடக அரசு சார்பில் கொண்டாடப்பட்டு வருகிறது.

ஜனாதிபதி முர்மு தொடங்கி வைத்தார்

தற்போது கொண்டாடப்படும் தசரா விழா 412-வது தசரா விழா ஆகும். கடந்த மாதம் (செப்டம்பர்) 26-ந்தேதி தசரா விழா சாமுண்டி மலையில் கோலாகலமாக தொடங்கியது. இதில் இந்திய ஜனாதிபதி திரவுபதி முர்மு கலந்துகொண்டு சாமுண்டீஸ்வரி அம்மனுக்கு சிறப்பு பூஜை செய்து தசரா விழாவை தொடங்கி வைத்தார்.

கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா பரவல் காரணமாக எளிமையாக தசரா விழா கொண்டாடப்பட்டது. ஆனால் இந்த ஆண்டு கொரோனா கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டுள்ளதால், வெகு விமரிசையாக தசராவை கொண்டாட மாநில அரசு முடிவு செய்தது. இதற்காக ரூ.36 கோடி நிதியும் ஒதுக்கப்பட்டது.

மின்னொளி அலங்காரம்

தசரா விழாவையொட்டி இளைஞர் தசரா, விவசாயிகள் தசரா, உணவு மேளா, மகளிர் தசரா, விளையாட்டு தசரா உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகளும், மலர் கண்காட்சியும் தொடங்கி நடைபெற்று வருகிறது. மேலும் அரண்மனை வளாகம், மானச கங்கோத்ரி, மகாராஜா கல்லூரி வளாகம் உள்ளிட்ட பகுதிகளில் கலை நிகழ்ச்சிகளும் நடந்தது. மேலும் தசரா கண்காட்சி வளாகத்தில் பொருட்காட்சியும் தொடங்கி நடந்து வருகிறது.

தசரா விழாவையொட்டி மைசூரு அரண்மனை, அரசு கட்டிடங்கள், பழங்கால கட்டிடங்களுக்கு மின்விளக்கு அலங்காரம் செய்யப்பட்டுள்ளது. மேலும் நகரம் முழுவதும் மின்விளக்குகளால் வரவேற்பு அலங்கார வளைவும் வைக்கப்பட்டுள்ளது. இதனால் நகரமே மின்னொளியில் ஜொலிக்கிறது.

தங்கப்பல்லக்கில் ஊர்வலம்

இது ஒருபுறம் இருக்க மைசூரு அரண்மனையில் தசரா விழாவையொட்டி நடைபெறும் பாரம்பரிய நிகழ்ச்சிகள், பூஜைகள், சம்பிரதாயங்கள் ஆகியவை வழக்கம் போல் நடந்தன. குறிப்பாக தங்க, வைர, நவரத்தினங்களால் ஆன சிம்மாசனத்தில் அமர்ந்து மன்னர் யதுவீர் தனியார் தர்பார் நடத்தினார்.

தசரா விழாவின் 8-வது நாளான நேற்று மைசூரு அரண்மனையில் பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடந்தன. அதேபோல் நவராத்திரியையொட்டி அரண்மனையில் வைக்கப்பட்டிருந்த கொலுவுக்கும் பல்வேறு பூஜைகள் செய்யப்பட்டன.

அதில் ராஜ உடையில் மன்னர் யதுவீர், ராணி பிரமோதா தேவி மற்றும் குறிப்பிடத்தக்க பிரமுகர்கள் கலந்துகொண்டனர். இன்று (செவ்வாய்க்கிழமை) ஆயுத பூஜையையொட்டி காலை 7 மணிக்கு மன்னர் யதுவீர், அம்பா விலாஸ் அரண்மனையில் ராஜகுரு, ராணி பிரமோதா தேவி ஆகியோருக்கு பாதபூஜை செய்கிறார். அதனை தொடர்ந்து சண்டி ஹோமம், கணபதி பூஜை, நவகிரக பூஜை செய்கிறார். பின்னர் காலை 8 மணிக்கு கோடி சோமேஸ்வரர் கோவில் வளாகத்தில் இருக்கும் பன்னி மரத்துக்கு பூஜை செய்கிறார். இதையடுத்து பட்டத்து யானை, குதிரை, ஒட்டகம் ஆகியவை புடைசூழ தங்கப்பல்லக்கில் ஊர்வலமாக சென்று கலசதீர்த்தம் கொண்டு வருகிறார்.

ஆயுதபூஜை

காலை 10 மணி முதல் காலை 11 மணி வரை அரண்மனை கட்டிடத்திற்குள் மல்யுத்த போட்டி நடக்கும் மைதானத்தில் ஆயுத பூஜை நிறைவேற்றுகிறார். அப்போது, பல்லக்கு, பீரங்கி, இரும்பு ஆயுதங்கள், மன்னர் காலத்தில் பயன்படுத்தப்பட்ட ஆயுதங்களுக்கு பூஜை செய்கிறார். பின்னர் பட்டத்து யானை, குதிரை, ஒட்டகம், பசுமாடு ஆகியவற்றுக்கு பாரம்பரிய முறையில பூஜை செய்கிறார்.

இதையடுத்து மதியம் 12 மணி அளவில் யதுவீர் ராஜ உடையில் சிம்மாசனத்தில் அமர்ந்து தனியார் தர்பார் நடத்துகிறார். பின்னா் நவராத்திரி கடைசி நாளின் பூஜைகளை அவர் முடித்து வைக்கிறார்.

தசரா ஊர்வலம்

நாளை (புதன்கிழமை) காலை அரண்மனையில் பாரம்பரியப்படி பல்வேறு பூஜைகள் நடக்கிறது. பின்னர் அரண்மனை வளாகத்தில் பிரத்யேக தளத்தில் கத்திபோடும் மல்யுத்த நிகழ்ச்சி நடக்கிறது. இதில் மொட்டை தலையுடன் இரு வீரர்கள் மல்லுக்கட்டுவார்கள். இருவரின் கைகளிலும் கூர்மையான கத்தி இருக்கும்.

அதில் ஒருவரின் தலையில் அந்த கத்தியால் குத்தி ரத்தம் சிந்தினால் போட்டி நிறுத்தப்பட்டு தசரா ஊர்வல ஏற்பாடுகள் தொடங்கப்படும். இதையடுத்து மன்னர் யதுவீர் அரண்மனை வளாகத்தில் உள்ள பன்னி மரத்திற்கு பூஜை செய்து அதனை வெட்டுவார்.

முதல்-மந்திரி தொடங்கிவைக்கிறார்

பின்னர் மதியம் 2.30 மணியில் இருந்து 5 மணிக்குள் மகர லக்கனத்தில் தசரா ஊர்வலம் தொடங்குகிறது. முதலில் அலங்கார ஊர்திகள் மற்றும் கலை குழுவினரின் ஊர்வலம் நடக்கிறது. அதனைத்தொடர்ந்து மாலை 5 மணி அளவில் ஜம்புசவாரி ஊர்வலம் தொடங்குகிறது.

சாமுண்டீஸ்வரி அம்மன் வீற்றிருக்கும் 750 கிலோ அம்பாரியை சுமந்து கொண்டு அபிமன்யு விழா மேடை அருகில் வரும். அப்போது விழா மேடையில் நின்று முதல்-மந்திரி பசவராஜ்பொம்ைம அம்பாரியில் உள்ள சாமுண்டீஸ்வரி அம்மனுக்கு மலர்கள் தூவி தசரா ஊர்வலத்தை தொடங்கிவைக்கிறார். இதில் மாவட்ட பொறுப்பு மந்திரி எஸ்.டி.சோமசேகர், கலெக்டர் பகாதிகவும், மேயர் சிவக்குமார் ஆகியோரும் பங்கேற்கிறார்கள்.

அலங்கார ஊர்திகள்

அதையடுத்து தசரா ஊர்வலம் தொடங்கும். இதில் தங்க அம்பாரியுடன் அபிமன்யு வீரநடை போடும். அதன் முன்னும் பின்னும் மற்ற தசரா யானைகள் வரும். மேலும் குதிரைப்படை, ஒட்டகப்படை, போலீசார் அணிவக்து செல்வர். மேலும் போலீஸ் இசைக்குழுவினர், யக்‌ஷகானா உள்பட பல்வேறு கலைக்குழுவினர் கலைநிகழ்ச்சிகளை நடத்தியப்படி ஊர்வலமாக செல்வார்கள்.

மொத்தம் 55 கலைக்குழுக்கள் பங்கேற்கின்றன. அத்துடன் கர்நாடகத்தின் கலை, பண்பாட்டு, கலாசாரத்தை பிரதிபலிக்கும் வகையில் அலங்கார ஊர்திகளும் இந்த ஊர்வலத்தில் அணிவகுக்க உள்ளது. அதாவது மறைந்த நடிகர் புனித்ராஜ்குமாரின் வாழ்க்கை வரலாற்றை பிரதிபலிக்கும் ஊர்தி, மத்திய- மாநில அரசுகளின் திட்டங்கள் மற்றும் சுற்றுலா தலங்களின் சிறப்புகள் அடங்கிய ஊர்திகளும் இதில் இடம் பெறுகின்றன.

கண்கொள்ளா காட்சி

யானைகள், கலைக்குழுக்கள், அலங்கார ஊர்திகள் அணிவகுத்து செல்வது கண்கொள்ளா காட்சியாக இருக்கும். இந்த காட்சிகளை மைசூரு நகரின் வீதிகளில் மக்கள் திரண்டு வந்து காண உள்ளனர். அரண்மனை வளாகத்தில் இருந்து தொடங்கும் இந்த ஊர்வலம் 5 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள பன்னி மண்டபத்தில் உள்ள தீப்பந்து விளையாட்டு மைதானம் வரை நடக்கிறது.

ஜம்பு சவாரி ஊர்வலம் நடக்கும் ராஜவீதியில் இருபுறமும் ஏராளமான மக்கள் திரண்டு ஜம்பு சவாரி ஊர்வலம், மற்றும் கலைக்குழுவினரின் நிகழ்ச்சியை ரசிப்பார்கள். இரவு 9 மணி அளவில் தசரா ஊர்வலம் பன்னிமண்டபத்தை சென்றடையும். அங்கு கண்களை கவரும் வகையில் லைட்ஷோ மற்றும் வாணவேடிக்கைகள் நிகழ்த்தப்படுகிறது. அத்துடன் இந்த ஆண்டுக்கான தசரா விழா நிறைவடைகிறது.

குவியும் மக்கள்

கொரோனா பரவல் காரணமாக 2 ஆண்டுகளுக்கு பிறகு ஜம்பு சவாரி ஊர்வலம் நடப்பதால், அதனை காண லட்சக்கணக்கான மக்கள் மைசூருவில் குவிந்து வருகிறார்கள்.

தசரா ஊர்வலத்தை காண மைசூரு நகருக்கு வெளிமாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளில் இருந்து ஏராளமானோர் படையெடுத்த வண்ணம் உள்ளனர். இதனால் மைசூரு நகரில் எங்கு பார்த்தாலும் மக்கள் கூட்டமாக காட்சி அளிக்கிறது. மேலும் நகரில் உள்ள ஓட்டல்கள் அனைத்தும் நிரம்பி விட்டன.

பலத்த பாதுகாப்பு

ஜம்பு சவாரி ஊர்வலத்தையொட்டி மைசூரு நகரில் 5 ஆயிரம் போலீசார் குவிக்கப்பட்டு உள்ளனர்.

மேலும் ஊர்வலம் நடக்கும் பாதையில் உயரமான கோபுரங்களில் கண்காணிப்பு கேமரா பொருத்தி போலீசார் சோதனை நடத்தி வருகிறார்கள். மைசூரு தசரா விழா உச்சக்கட்டத்தை எட்டியுள்ளதால் மைசூரு நகர் விழாக்கோலம் பூண்டுள்ளது.

மேலும் செய்திகள்