அரண்மனை வளாகத்தில் தசரா யானைகள் ஆனந்த குளியல்
|தசரா விழாவில் பங்கேற்க உள்ள யானைகள் அரண்மனை வளாகத்தில் ஆனந்த குளியல் போட்டது.
மைசூரு
தசரா விழா
மைசூருவில் ஆண்டுதோறும் விஜயதசமியையொட்டி தசரா விழா கொண்டாடப்பட்டு வருகிறது. மைசூரு தசரா திருவிழா உலகப்பிரசித்தி பெற்றதாகும்.
10 நாட்கள் நடைபெறும் திருவிழாவை காண வெளிமாநிலம், வெளிநாடுகளில் இருந்து லட்சக்கணக்கனோர் குவிவார்கள்.
இந்த ஆண்டு தசரா விழா அடுத்த மாதம் (அக்டோபர்) 15-ந் தேதி தொடங்கி 24-ந்தேதி வரை 10 நாட்கள் நடக்கிறது. இந்த ஆண்டு தசரா விழாவில் 14 யானைகள் பங்கேற்கின்றன.
கடந்த 5-ந்தேதி உன்சூர் தாலுகா வனப்பகுயில் இருந்து மைசூரு அரண்மனை வளாகத்திற்கு 8 யானைகள் அழைத்து வரப்பட்டன.
நடைபயிற்சி
இங்கு யானைகளுக்கு காலை, மாைல நடைபயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. நேற்று 4-வது நாளாக யானைகள் நடைபயிற்சி மேற்கொண்டன. காலை 7 மணிக்கு யானைகள் அரண்மனை வளாகத்தில் இருந்து பன்னி மண்டபம் தசரா தீப்பந்தம் விளையாட்டு மைதானம் 5 கிலோ மீட்டர் தூரம் வரை நடைபயிற்சி சென்றன.
பின்னர் அங்கிருந்து மீண்டும் யானைகள் அரண்மனை வளாகத்திற்கு வந்தன. அங்கு யானைகளை பாகன்கள் குளிப்பாட்டினர். அப்போது யானைகள் ஆனந்த குளியல் போட்டன. பின்னர் யானைகள் அரண்மனை வளாகத்தில் ஓய்வெடுத்தன.
உடல் பரிசோதனை
காலை நடைபயிற்சி சென்ற பின் மாைல 4 வரை யானைகளுக்கு ஓய்வு அளிக்கப்பட்டது. அப்போது யானைகளுக்கு கரும்பு, வெல்லம், நெல், கொப்பரை தேங்காய் ஆகியவை உணவாக கொடுக்கப்பட்டது. மேலும் தினமும் யானைகளுக்கு உடல் பரிசோதனை நடத்தப்படுகிறது.
பொதுமக்கள் யாராவது வாழைப்பழம், பலாப்பழம் கொடுக்க வந்தால், பரிசோதனை செய்த பின்னரே அவைகள் யானைகளுக்கு கொடுக்கப்படும். அரண்மனையை பார்க்க சுற்றுலா பயணிகள் யானைகளை பார்த்து செல்பி எடுத்து செல்கிறார்கள்.