< Back
தேசிய செய்திகள்
தசரா யானைகளுக்கு பீரங்கி குண்டுகளை வெடிக்க செய்து பயிற்சி
தேசிய செய்திகள்

தசரா யானைகளுக்கு பீரங்கி குண்டுகளை வெடிக்க செய்து பயிற்சி

தினத்தந்தி
|
12 Sep 2022 10:12 PM GMT

வெடி சத்தம் கேட்டு மிரளாமல் இருக்க தசரா யானைகளுக்கு பீரங்கி குண்டுகளை வெடிக்க செய்து வெடி சத்த பயிற்சி அளிக்கப்பட்டது. இதில் 4 யானைகளும், 10 குதிரைகளும் மிரண்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

மைசூரு:

ஜனாதிபதி முர்மு தொடங்கிவைக்கிறார்

வரலாற்று சிறப்புமிக்க மைசூரு தசரா விழா வருகிற 26-ந்தேதி தொடங்கி அடுத்த மாதம் (அக்டோபர்) 5-ந்தேதி வரை 10 நாட்கள் கோலாகலமாக நடக்கிறது. கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா காரணமாக எளிமையாக நடந்த விழா இந்த முறை சீரும் சிறப்புமாக நடத்த கர்நாடக அரசு முடிவு செய்துள்ளது.

இதனால் இந்த ஆண்டு தசரா விழாவை இந்திய ஜனாதிபதி திரவுபதி முர்மு தொடங்கிவைக்கிறார். அவர் சாமுண்டீஸ்வரி அம்மன் கோவிலில் சிறப்பு பூஜை நடத்தி, அம்மனுக்கு மலர்தூவி மைசூரு தசரா விழாவை தொடங்கிவைக்க இருக்கிறார்.

ஊர்வலத்தில் பங்கேற்க 14 யானைகள் வருகை

விழாவின் சிகர நிகழ்ச்சியாக 5-ந்தேதி ஜம்புசவாரி எனும் தசரா ஊர்வலம் நடக்கிறது. இதில் 750 கிலோ தங்க அம்பாரியை சுமந்து கொண்டு அபிமன்யு யானை முன்னே செல்லும், அதைத்தொடர்ந்து மற்ற யானைகளும், குதிரைப்படை, போலீஸ் படை, அலங்கார ஊர்திகள், பல்வேறு கலைக்குழுவினர் பயணிப்பர். இது பார்க்க கண்கொள்ளா காட்சியாக இருக்கும்.

இத்தகைய ஜம்புசவாரி ஊர்வலத்தில் பங்கேற்க முதற்கட்டமாக 9 யானைகள், 2-வது கட்டமாக 5 யானைகள் என மொத்தம் 14 யானைகள் மைசூருவுக்கு வந்துள்ளன. அரண்மனை வளாகத்தில் தங்கியுள்ள அந்த யானைகளுக்கு தினமும் காலை மற்றும் மாலை வேளையில் ஜம்புசவாரி ஊர்வலம் நடைபெறும் மைசூரு அரண்மனையில் இருந்து 5 கிலோ மீட்டர் தூரம் உள்ள பன்னிமண்டபம் வரை நடைபயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. அத்துடன் தங்க அம்பாரியை சுமக்கும் அபிமன்யுவுக்கு மணல் மூட்டையை சுமக்கும் பயிற்சியும் வழங்கப்பட்டு வருகிறது.

வெடி சத்த பயிற்சி

குறிப்பாக ஜம்புசவாரி ஊர்வலம் தொடங்கும் போது மைசூரு அரண்மனை வளாகத்தில் போலீசார் துப்பாக்கி மூலம் 21 ரவுண்டு வானை நோக்கி சுடுவார்கள். இவ்வாறு சுடும் போதும், பட்டாசு வெடிக்கும் போதும், மேளதாளம் முழங்கும் போதும் தசரா யானைகள், குதிரைகள் மிரளும். எனவே யானைகள், குதிரைகள் இந்த சத்தங்களை கேட்டு மிரளாமல் இருக்கும் வகையில் பீரங்கி குண்டுகளை வெடித்து வெடி சத்த பயிற்சி அளிக்கப்படுவது வழக்கம்.

அதன்படி நேற்று மைசூரு அரண்மனை வளாகத்தில் கோட்டை மாரியம்மன் கோவில் அருகில் உள்ள வாகன நிறுத்தும் இடத்தில் நேற்று தசரா விழாவில் பங்கேற்கும் 14 யானைகள், 40-க்கும் மேற்பட்ட குதிரைகளுக்கு வெடிசத்த பயிற்சி அளிக்கப்பட்டது.

7 பீரங்கிகள் மூலம் 21 தடவை குண்டுகள்...

இதற்காக 7 பீரங்கிகளை ஆயுதப்படை போலீசார் அங்கு அலங்கரித்து கொண்டு வந்தனர். மேலும் பயிற்சி பெறும் யானைகள், குதிரைகளுக்கும் மாரியம்மன் கோவிலில் சிறப்பு பூஜை நடத்தி திலகமிடப்பட்டது. பின்னர் பீரங்கிகள் அருகே யானைகளும், குதிரைகளும் அணிவகுத்து நிறுத்தப்பட்டன.

அதாவது அபிமன்யு, அர்ஜுனா, காவேரி, சைத்ரா, லட்சுமி, கோபாலசாமி, தனஞ்செயா, பீமா, பார்த்தசாரதி, சுக்ரீவா, ஸ்ரீராமா, விஜயா, கோபி ஆகிய யானைகள் பங்கேற்றன.

இதையடுத்து 7 பீரங்கிகள் மூலம் 21 முறை வெடி குண்டுகளை வெடித்து வெடி சத்த பயிற்சி அளிக்கப்பட்டது. முதல்தடவை பீரங்கி மூலம் குண்டுகளை வெடிக்க வைத்ததும் பலத்த சத்தத்துடன் தீப்பிழம்பு கிளம்பின.

4 யானைகள்-குதிரைகள் மிரண்டன

இதை கேட்டு சுக்ரீவா, பீமா, பார்த்தசாரதி ஆகிய யானைகளும், 10-க்கும் அதிகமான குதிரைகளும் மிரண்டன. இதில் சுக்ரீவா, பீமா, பார்த்தசாரதி ஆகிய 3 யானைகளும் முதல்முறையாக தசரா விழாவில் பங்கேற்க இருப்பதால் வெடி சத்த பயிற்சியின் போது முன்எச்சரிக்கையாக 3 யானைகளின் கால்களும் சங்கிலியால் பிணைக்கப்பட்டு இருந்தன. இருப்பினும் மிரண்டு உடலை அங்குமிங்கும் யானைகள் குலுக்கின. இதனால் பாகன்கள் அந்த யானைகளை ஆசுவாசப்படுத்தினர்.

அதுபோல் தசரா விழாவில் 2 ஆண்டுகளாக பங்கேற்று வரும் தனஞ்செயாவும் வெடி சத்தம் கேட்டு சிறிது நேரம் மிரண்டு போய் இருந்தது. யானைகள், குதிரைகள் மிரண்டதால் சிறிது நேரம் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. பின்னர் அடுத்தடுத்த முறை பீரங்கி குண்டுகள் வெடிக்கப்பட்ட போது ஏற்கனவே மிரண்ட யானைகள், குதிரைகள் வெடி சத்தத்தை கேட்டு பழகி சாந்தமாக நிற்க தொடங்கின.

மேலும் ஜம்பு சவாரி ஊர்வலத்தில் சாமுண்டீஸ்வரி அம்மன் வீற்றிருக்கும் 750 கிலோ தங்க அம்பாரியை சுமக்கும் அபிமன்யு, அர்ஜுனா ஆகியவை யானைகள் வெடி சத்தம் பயிற்சியின் போது சாந்தமாக நின்றிருந்தன. இந்த பயிற்சியை 30-க்கும் மேற்பட்ட போலீசார் அளித்தனர். இதையொட்டி அங்கு பலத்த போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டு இருந்தது. இந்த வெடி சத்த பயிற்சி மேலும் ஒரு வார காலம் அளிக்கப்பட இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

மேலும் செய்திகள்