சித்தராமையா ஆட்சியில் ஊழலுக்கு போலீஸ் துறை துணை போனது; சி.டி.ரவி எம்.எல்.ஏ. குற்றச்சாட்டு
|சித்தராமையா ஆட்சியில் ஊழலுக்கு போலீஸ் துறை துணை போனது என்று சி.டி.ரவி எம்.எல்.ஏ. குற்றம்சாட்டி உள்ளார்.
சிக்கமகளூரு;
போலீஸ் துறை துணை போனது
சிக்கமகளூருவில் பா.ஜனதா தேசிய பொதுச்செயலாளரும், சிக்கமகளூரு தொகுதி எம்.எல்.ஏ.வுமான சி.டி.ரவி நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-
கர்நாடகத்தில் நடந்த சப்-இன்ஸ்பெக்டர் தேர்வு முறைகேடுக்கு பொறுப்பு ஏற்று உள்துறை மந்திரி அரக ஞானேந்திரா பதவி விலக வேண்டும் என சித்தராமையா வலியுறுத்தி வருகிறார். பா.ஜனதா ஆட்சியில் ஊழல் செய்தவர்கள், லஞ்சம் பெற்றவர்கள் அனைவரும் தண்டிக்கப்பட்டு வருகின்றனர்.
லஞ்சம் பெற்றதாக ஐ.ஏ.எஸ். மற்றும் ஐ.பி.எஸ். அதிகாரிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். ஆனால் சித்தராமையா ஆட்சியில் ஊழலுக்கு போலீஸ் துறை துணைபோனது. அவரது ஆட்சியில் அர்க்காவதி திட்டத்தில் ஊழல் நடைபெற்றது. அதனை விசாரிக்க கெம்பண்ணா குழு அமைக்கப்பட்டது. ஆனால், அந்த விவகாரத்தில் விசாரணை முடிவுகள் மூடிமறைக்கப்பட்டது.
சட்டம்-ஒழுங்கு சீராக உள்ளது
ஊழல் வழக்கில் இருந்து தப்பிப்பதற்காக சித்தராமையா லோக் அயுக்தா அமைப்பை தடை செய்து ஊழல் தடுப்பு படையை கொண்டு வந்தார். இதன்மூலம் அவர் ஊழல் செய்த காங்கிரசாரை காப்பாற்றினார். பா.ஜனதா ஆட்சியில் சட்டம்-ஒழுங்கு சீராக உள்ளது.
காங்கிரஸ் எம்.எல்.ஏ. ஜமீர் அகமதுகான் வீடுகளில் சோதனை நடத்தினால் சித்தராமையாவுக்கு ஏன் கோபம் வருகிறது. சட்டவிரோதமாக சொத்து சேர்த்ததால் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அதனால் பா.ஜனதா அரசு மீது அவதூறு கூறி வருவதை சித்தராமையா நிறுத்தி கொள்ள வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.