சந்திர கிரகணத்தையொட்டி, திருப்பதி கோவில் நடை இன்று அடைப்பு
|நாளை அதிகாலை பரிகார பூஜைக்கு பிறகு பக்தர்கள் தரிசனத்துக்கு அனுமதிக்கப்படுவார்கள்.
திருப்பதி,
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் இன்று சனிக்கிழமை என்பதால் அதிகாலை முதலே பக்தர்கள் கூட்டம் அலை மோதியது. நேரடி இலவச தரிசனத்தில் அனைத்து காத்திருப்பு அறைகளும் நிரம்பின. அதற்கு வெளியே பக்தர்கள் வரிசையில் காத்திருந்தனர்.
நேற்று ஏழுமலையான் கோவிலில் 63,404 பேர் சாமி தரிசனம் செய்தனர். 26,659 பேர் முடி காணிக்கை செலுத்தினர். ரூ.3.42 கோடி உண்டியல் காணிக்கை வசூலானது. நேரடி இலவச தரிசனத்திற்கு வந்த பக்தர்கள் 24 மணி நேரம் காத்திருந்து சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.
இந்த நிலையில், சந்திர கிரகணத்தையொட்டி இன்று இரவு 7.05 மணிமுதல் நாளை அதிகாலை 3.15 வரை 8 மணிநேரம் கோவில் மூடப்படுகிறது. நாளை அதிகாலை பரிகார பூஜைக்கு பிறகு பக்தர்கள் தரிசனத்துக்கு அனுமதிக்கப்படுவார்கள். நடைபாதையில் சிறுத்தை மற்றும் கரடி நடமாட்டம் உள்ளது. நடைபாதையில் வரும் பக்தர்கள் கூட்டமாக செல்ல வேண்டும். எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என தேவஸ்தான அதிகாரிகள் வலியுறுத்தி உள்ளனர்.