தொடர் கனமழையால் சிக்கமகளூருவில் காபி தோட்டங்களில் மண்சரிவு
|தொடர் கனமழை காரணமாக சிக்கமகளூருவில் காபி தோட்டங்களில் மண்சரிவு ஏற்பட்டு உள்ளது.
சிக்கமகளூரு;
சிக்கமகளூரு மாவட்டத்தில் கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக தொடர் கனமழை பெய்து வருகிறது. வரலாறு காணாத வகையில் தொடர் கனமழை பெய்து வருவதால் மாவட்டத்தில் ஏராளமான இடங்களில் மண்சரிவு ஏற்பட்டுள்ளது. ஏரிகள், குளங்கள் உள்ளிட்ட நீர்நிலைகள் நிரம்பிவிட்டன.
ஆறுகளில் காட்டாற்று வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. காபித்தோட்டங்கள் உள்ளிட்ட விவசாய நிலங்கள் நாசமடைந்து உள்ளன. வீடுகள் இடிந்துள்ளன. இந்த நிலையில் மூடிகெரே தாலுகா சிக்கமாகரவள்ளி கிராமத்தில் வசித்து வரும் சுரேஷ் என்பவருக்கு சொந்தமான காபித்தோட்டம் மற்றும் ராஜேஷ் என்பவருக்கு சொந்தமான காபித்தோட்டத்தில் மண்சரிவு ஏற்பட்டு காபிச்செடிகள் நாசமாகி இருக்கின்றன.
மேலும் தொடர்ந்து அப்பகுதி மண்சரிவு ஏற்படும் நிலையில் அபாயமாக காட்சி அளிக்கிறது. இதனால் பெரிய அளவில் அப்பகுதியில் அசம்பாவிதம் ஏற்பட்டு விடும் என்று அப்பகுதி மக்கள் அச்சத்தில் உள்ளனர். இதுபற்றி அறிந்த பா.ஜனதாவைச் சேர்ந்த குமாரசாமி எம்.எல்.ஏ. சம்பவ இடத்திற்கு வந்து பார்வையிட்டார்.
தற்போது மழை குறைந்துள்ளதால் மண்சரிவு ஏற்பட வாய்ப்பு இல்லை என்றும், இருப்பினும் முன்னெச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்றும் அவர் கூறினார். மேலும் மண்சரிவு ஏற்பட்டால் வேறு இடம் ஒதுக்கி தருவதாகவும், காபித்தோட்டங்களில் மக்கள் யாரும் வசிக்க வேண்டாம் என்றும் அவர் தெரிவித்தார்.