தொடர் கனமழையால் சிவமொக்காவில் ரூ.212.13 கோடிக்கு பயிர்கள் நாசம்; மாவட்ட நிர்வாகம் தகவல்
|தொடர் கனமழையால் சிவமொக்கா மாவட்டத்தில் ரூ.212.13 கோடி அளவில் பயிர்கள் நாசம் அடைந்துள்ளதாக மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.
சிவமொக்கா;
தென்மேற்கு பருவமழை
கர்நாடகத்தில் தென்மேற்கு பருவமழை வெளுத்து வாங்கி வருகிறது. அதுபோல் சிவமொக்கா மாவட்டத்தில் தொடர் கனமழை கொட்டி வருகிறது. தொடர் கனமழையால் ஏற்கனவே மாவட்டத்தில் உள்ள அணைகள், ஏரிகள், குளங்கள் உள்ளிட்ட நீர்நிலைகள் நிரம்பிவிட்டன. மேலும் மழையால் மாவட்டத்தில் ஏராளமான விவசாய நிலங்கள் பாதிக்கப்பட்டு உள்ளன. இதுதொடர்பாக மாவட்ட நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:-
சிவமொக்காவில் கடந்த 3 மாதங்களாக பெய்த தொடர் கனமழையால் 3 ஆயிரத்து 291 ஹெக்டேர் விளைநிலங்கள் நாசமாகி உள்ளன. இதில் நெற்பயிர்களும் அடங்கும். ஜூலை மற்றும் ஆகஸ்டு மாதத்தில் மட்டும் ரூ.212.13 கோடி அளவில் பயிர்கள் நாசம் அடைந்துள்ளன.
நிவாரண உதவிகள்
கடந்த மாதம்(ஆகஸ்டு) 1-ந் தேதி முதல் 28-ந் தேதி வரை மாவட்டத்தில் 540 மில்லி மீட்டர் மழை பதிவாகி இருக்கிறது. சராசரியாக இந்த காலக்கட்டத்தில் ஒவ்வொரு ஆண்டும் 526 மில்லி மீட்டர் மழை தான் பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மாவட்டத்தில் இதுவரை கனமழையால் 1,513 வீடுகள் சேதம் அடைந்துள்ளன.
பாதிக்கப்பட்ட மக்களுக்கு இதுவரை ரூ.30.88 கோடிக்கு நிவாரண உதவிகள் செய்யப்பட்டு இருக்கிறது. இதுதவிர மாவட்ட கலெக்டரின் வங்கி கணக்கில் இருந்து ரூ.11 கோடி நிதி பெறப்பட்டு நிவாரண உதவிகள் செய்யப்பட உள்ளது.
இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டு உள்ளது.