குடிபோதையில் கல்லூரி மாணவர் ஓட்டிச்சென்ற கார் மோதி.. நடைபாதையில் படுத்து தூங்கிய 2 பெண்கள் பலி
|நாக்பூரில் குடிபோதை மாணவர் ஓட்டிச்சென்ற கார் மோதி நடைபாதையில் படுத்து தூங்கிய 2 பெண்கள் உடல் நசுங்கி பலியானார்கள். குழந்தைகள் உள்பட 7 பேர் காயம் அடைந்தனர்.
நாக்பூர்,
நாக்பூர், திகோரி பகுதியில் பொம்மை விற்பனை செய்யும் குடும்பத்தினர் அங்குள்ள நடைபாதையில் நேற்று முன்தினம் இரவு படுத்து தூங்கினர். நள்ளிரவு நேரத்தில் அந்த வழியாக வந்த கார் ஒன்று நடைபாதையில் படுத்து உறங்கிய அவர்கள் மீது பயங்கரமாக மோதியது. அந்த கார் ஏறியதில் பெண்கள், குழந்தைகள் உள்ளிட்டவர்கள் படுகாயம் அடைந்தனர்.இந்த சம்பவத்தை அடுத்து காரில் வந்தவர்கள் அங்கிருந்து தப்பி விட்டனர். இதுபற்றி தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். ஆனால் கார் ஏறி, இறங்கியதில் 2 பெண்கள் உடல் நசுங்கி உயிரிழந்து கிடந்தனர்.
மேலும் 4 குழந்தைகள் உள்பட 7 பேர் காயங்களுடன் உயிருக்கு போராடினர். அவர்கள் உடனடியாக மீட்கப்பட்டு அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர்.பலியான பெண்கள் 2 பேரின் உடல்கள் மீட்கப்பட்டு பிரேத பரிசோதனைக்காக ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டது. அவர்கள் பெயர் கந்திபாய்(வயது42), சீதாராம் பாபுலால் பாக்தியா(30) என்று தெரியவந்தது.காயம் அடைந்தவர்களுக்கு ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. நாடோடிகளான இவர்கள் கடந்த 8 மாதத்திற்கு முன்பு தான் பிழைப்புக்காக நாக்பூர் வந்துள்ளனர். பிழைப்புக்காக பொம்மைகளை விற்று விட்டு இரவு வேளையில் நடைபாதையில் படுத்து தூங்குவது வழக்கம். இந்தநிலையில் அப்பாவிகளான அவர்கள் மீது கார் ஏறிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
இதற்கிடையே விபத்தை ஏற்படுத்திய கார் சம்பவ இடத்தில் இருந்து தப்பிய நிலையில், போலீசார் கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்து விசாரணை நடத்தினர். இதில் காரை ஓட்டி விபத்தை ஏற்படுத்தியது பூஷன் லன்ஜேவார் என்ற என்ஜினீயரிங் மாணவர் என்பதும், அவர் குடிபோதையில் நடைபாதையில் படுத்து தூங்கியவர்கள் மீது காரை மோதியதும் தெரியவந்தது. அவருடன் காரில் 5 பேர் இருந்துள்ளனர். அவர்களும் குடிபோதையில் இருந்தது தெரியவந்துள்ளது. என்ஜினீயரிங் மாணவர் பூஷன் லன்ஜேவாரை கைது செய்து, போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
புனேயில் 17 வயது சிறுவன் குடிபோதையில் ஓட்டிச்சென்ற கார் மோதி ஐ.டி.நிறுவன ஊழியர்கள் 2 பேர் பலியான சம்பவம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், நாக்பூரில் குடிபோதையில் என்ஜினீரிங் மாணவர் ஒருவர் ஓட்டிய கார் நடைபாதையில் படுத்து தூங்கியவர்கள் மீது மோதி உயிர் பலியை ஏற்படுத்தி இருப்பது அதிர்வலையை ஏற்படுத்தி உள்ளது.