அரசு அலுவலகத்தில் புகுந்து பெண் அதிகாரியை குடிபோதையில் தாக்கிய கணவர்
|சிவமொக்காவில் அரசு அலுவலகத்தில் புகுந்து பெண் அதிகாரியை அவரது கணவர் குடிபோதையில் சரமாரியாக தாக்கி உள்ளார். இதுதொடர்பான வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
சிவமொக்கா:
சிவமொக்கா டவுனை சேர்ந்தவர் சீனிவாச மூர்த்தி. இவரது மனைவி ஷில்பா எம்.தொட்டமணி. இவர்களுக்கு கடந்த 2006-ம் ஆண்டு திருமணம் நடந்தது. ஷில்பா சிவமொக்கா மாற்றுத்திறனாளி மற்றும் மூத்த குடிமக்கள் அதிகாரமளித்தல் துறையில் அதிகாரியாக பணியாற்றி வருகிறார். சீனிவாச மூர்த்தி மது குடிக்கும் பழக்கத்துக்கு அடிமையாகி இருந்ததாக தெரிகிறது.
இதனால், கணவன்-மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. இந்த நிலையில் கடந்த ஜூலை மாதம் 19-ந்தேதி ஷில்பா அலுவலகத்தில் பணியில் இருந்தார். அப்போது மதுபோதையில் சீனிவாச மூர்த்தி அலுவலகத்துக்கு வந்தார்.
திடீரென்று அவர் ஷில்பாவுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். பின்னர் எதிர்பாராதவிதமாக சீனிவாச மூர்த்தி, ஷில்பாவை தாக்க தொடங்கினார். இதனை பார்த்து சக அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் அதிர்ச்சி அடைந்தனர். மேலும் கம்ப்யூட்டர் ஆபரேட்டர் கவிதா அவரை தடுக்க முயன்றார். அப்போது அவரையும் சீனிவாச மூர்த்தி தாக்கினார். இந்த சரமாரி தாக்குதலில் ஷில்பா பலத்த காயம் அடைந்தார்.
இதற்கிடையே, இந்த சம்பவத்தை அலுவலக ஊழியர் ஒருவர் தனது செல்போனில் வீடியோ எடுத்தார். இதனை பார்த்து ஆத்திரமடைந்த சீனிவாச மூர்த்தி, அவரது செல்போனை பிடுங்கி தரையில் போட்டு உடைத்தார். இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இந்த சம்பவம் பற்றி புகார் எதுவும் அளிக்கப்படவில்லை. இதனால் தற்போது தாமதமாக இந்த சம்பவம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.
கடந்த 2006-ம் ஆண்டு ஷில்பாவை சீனிவாச மூர்த்தி திருமணம் செய்திருந்தாலும், அவர்கள் மகிழ்ச்சியாக வாழவில்லை என தெரிகிறது. மேலும் கடந்த 2011-ம் ஆண்டு அவர் அரசு பணியில் சேர்ந்தார். இதனால் அவரை வேலைக்கு செல்ல வேண்டாம் என கூறி சீனிவாச மூர்த்தி கண்டித்துள்ளார். இதனால் விவாகரத்தும் கேட்டுள்ளார். ஆனால் ஷில்பா விவாகரத்து வழங்க மறுத்துவிட்டார்.
இதனால் கடந்த மாதம் 19-ந்தேதி குடிபோதையில் அலுவலகத்தில் புகுந்து மனைவி ஷில்பாவை சீனிவாச மூர்த்தி தாக்கியது தெரியவந்தது. இதுதொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இதுதொடர்பாக தற்போது சிவமொக்கா போலீசில் ஷில்பா புகார் அளித்துள்ளார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.