< Back
தேசிய செய்திகள்
குடித்து விட்ட மணமேடையில் தள்ளாடிய மணமகன்: கோபப்பட்டு திருமணத்தை நிறுத்திய மணமகள்...!
தேசிய செய்திகள்

குடித்து விட்ட மணமேடையில் தள்ளாடிய மணமகன்: கோபப்பட்டு திருமணத்தை நிறுத்திய மணமகள்...!

தினத்தந்தி
|
12 March 2023 9:32 PM IST

திருமணத்தின் போது மணமேடையில் போதையில் தள்ளாடிய மாப்பிள்ளையை பார்த்து அதிர்ச்சி அடைந்த மணமகள் உடனடியாக திருமணத்தை ரத்து செய்துள்ளார்.

கவுகாத்தி,

அசாம் மாநிலம் நல்பாரியில் மதுபோதையில் மாப்பிள்ளை தள்ளாடியபடி இருந்ததோடு மணமேடையிலேயே இருக்க முடியாமல் படுத்தது திருமண வீட்டினருக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

மணமகனின் செயலால் கடும் கோபம் அடைந்த மணமகள் திருமணத்தை நிறுத்தி விட்டார். திருமண கனவுகளுடன் வந்த மணப்பெண்ணிற்கு பெரும் ஏமாற்றத்தை கொடுத்த இந்த மாப்பிள்ளையின் செயலால் மணமகள் வீட்டினர் கடும் கோபம் அடைந்தனர். இந்த சம்பவம் பற்றிய விவரம் வருமாறு:-

அசாம் மாநிலத்தின் நல்பாரி மாவட்டத்தில் நல்பரி என்ற நகரம் உள்ளது. இந்த நகரத்தில் கடந்த 2-ம் தேதி திருமணம் நடைபெறுவதாக இருந்தது. திருமணத்திற்காக திருமண வீட்டினர் தடல் புடல் ஏற்பாடுகளும் செய்து இருந்தனர். திருமண நிகழ்ச்சியில் பங்கேற்று மணமக்களை வாழ்த்த இரு வீட்டை சேர்ந்த சொந்த பந்தங்களும் வந்து இருந்தனர். இதனால் திருமணம் நடைபெறும் இடந்த இடம் களை கட்டியிருந்தது. திருமணத்தில் தாலி கட்டுவதற்கு முன்பாக மணமேடையில் மணமகன் பட்டு வேஷ்டி சட்டைகளுடன் உட்கார வைக்கப்பட்டு இருந்தார்.

திருமண சடங்குகளும் நடைபெற்று கொண்டிருந்தது. ஆனால், மணமகன் நடவடிக்கையை பார்த்தால் மணமகள் வீட்டினருக்கு சந்தேகம் ஏற்பட்டது. மதுபோதையில் மிதந்து கொண்டிருந்த மணமகன் ஒரு கட்டத்தில் மேடையில் அமர்ந்து கூட இருக்க முடியாத அளவிற்கு செம போதையில் இருந்துள்ளார். சிறிது நேரத்தில் மணமேடையிலே போதையில் திடீரென சாய்ந்தார். இதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த மணமகள் வீட்டினர் , மாப்பிள்ளையின் நடவடிக்கை குறித்து புகார் அளித்தனர்.

ஆனால், மணமகன் வீட்டைச் சேர்ந்த பாதிக்கும் மேற்பட்டோர் போதையில் தான் இருந்தார்களாம். மேலும் பெண் வீட்டினரை அவதூறாக பேசியதாகவும் கூறப்படுகிறது. இதற்கு மேல் பொறுமை காக்க முடியாது என்று முடிவெடுத்த மணப்பெண் திருமணத்தை நிறுத்த முடிவு செய்தார். இதனால் மணமேடைக்கு வரமுடியாது என்று திட்டவட்டமாக கூறிவிட்டார். இதையடுத்து, திருமணத்தை நிறுத்த முடிவு செய்த மணப்பெண் வீட்டினர் அருகில் உள்ள போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தனர். திருமண செலவுகளுக்காக உரிய இழப்பீடு கொடுக்க வேண்டும் என்றும் மணமகள் வீட்டினர் வலியுறுத்தியதாக தெரிகிறது. இதையடுத்து, போலீசார் இரு வீட்டினரையும் அழைத்து பேசியதாக சொல்லப்படுகிறது. திருமண மண்டபத்தில் என்ன நடக்கிறது என்று கூட தெரியாமல் மணமகன் போதையில் இருந்துள்ளார்.

இதனிடையே, மணமேடையில் மாப்பிள்ளை போதை தலைக்கேறிய நிலையில், தள்ளாட்டத்துடன் இருக்கும் காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வெளியாகியுள்ளது. அதில், பட்டு வேஷ்டி சட்டையில் இருக்கும் மணமகன் இருக்க கூட முடியாமல் அருகில் இருந்த மற்றொருவரின் மேல் அப்படியே சாய்ந்து அவரது மடியில் படுத்து விடுகிறார். இந்தக் காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது. நெட்டிசன்கள் பலரும் மாப்பிள்ளையின் செயலை கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.

மேலும் செய்திகள்