குடிபோதையில் போலீஸ்காரர் மீது தாக்குதல்: வெளிநாட்டு பெண்கள் 3 பேர் கைது
|குடிபோதையில் போலீஸ்காரர் மீது தாக்குதல் நடத்திய வெளிநாட்டு பெண்கள் 3 பேர் கைது செய்யப்பட்டனர்.
பெங்களூரு: பெங்களூரு கப்பன்பார்க் போலீஸ் எல்லைக்கு உட்பட்ட பிரிகேட் ரோட்டில் உள்ள மதுபான விடுதியில் நேற்று நள்ளிரவு வரை விருந்து நிகழ்ச்சி நடைபெற்றது. இதுபற்றி அறிந்ததும் ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்த கப்பன்பார்க் போலீசார் அங்கு விரைந்து சென்றனர். பின்னர் அங்கிருந்த வெளிநாட்டு பெண்கள் உள்ளிட்டோரை மதுபான விடுதியில் இருந்து போலீசார் வெளியேற்றினாா்கள். அப்போது அந்த பெண்கள் பிரிகேட் ரோட்டிலேயே நீண்ட நேரம் நின்றபடி இருந்தார்கள். அவர்களை வீட்டுக்கு செல்லும்படி போலீஸ்காரர்கள் கூறினார்கள். இதனால் குடிபோதையில் இருந்த பெண்கள், போலீஸ்காரர்களுடன் வாக்குவாதம் செய்தார்கள்.
அந்த சந்தர்ப்பத்தில் ஒரு பெண், போலீஸ்காரர் ஒருவரை தாக்கினார். மற்ற போலீஸ்காரர்கள் மீதும் வெளிநாட்டு பெண்கள் தாக்குதல் நடத்த முயன்றனர். தகவல் அறிந்ததும் கப்பன் பார்க் போலீசார் விரைந்து வந்து 3 பெண்களையும் பிடித்து கைது செய்தார்கள். விசாரணையில், அவர்கள் ஆப்பிரிக்காவை சேர்ந்தவர்கள் என்றும், பெங்களூருவில் வசித்து வருவதும் தெரிந்தது. குடிபோதையில் போலீஸ்காரர் மீது தாக்குதல் நடத்தியது தெரியவந்துள்ளது. இதுகுறித்து கப்பன்பார்க் போலீசார், 3 பெண்கள் மீதும் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த சம்பவம் பெங்களூருவில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.