ரூ.49 கோடி மதிப்புள்ள போதைப்பொருள் பறிமுதல்: இந்திய-நேபாள எல்லையில் 4 பேர் கைது
|குற்றவாளிகள் மீது போதைப்பொருள் தடுப்புச்சட்டத்தின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
மஹராஜ்கஞ்ச்,
இந்திய - நேபாள எல்லையில் பல கோடி ரூபாய் மதிப்பிலான போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளது.
உத்தர பிரதேச மாநிலத்தில் உள்ள இந்திய - நேபாள எல்லையில் அமைந்துள்ள சோதனை சாவடியில் வழக்கம்போல் இன்று போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது 4 பேர் மீது சந்தேகம் ஏற்பட்டது. அதனால் அவர்களின் வாகனத்தை சோதனை செய்தனர்.
அப்போது, அவர்கள் கஞ்சா செடியின் பிசினில் இருந்து தயாரிக்கப்படும் சராஸ் என்ற போதைப்பொருளை கடத்தி வந்தது தெரியவந்தது. அவர்களிடம் இருந்து 49 கோடி ரூபாய் மதிப்புள்ள 85 கிலோ சராஸ் போதைப்பொருளை அதிகாரிகள் அதிரடியாக பறிமுதல் செய்தனர்.
மேலும் போதைப்பொருளை பதுக்கி வைத்திருந்த 4 பேர் மீது போதைப்பொருள் தடுப்புச்சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து போலீசார் கைது செய்துள்ளதாக எஸ்.பி கவுஸ்துப் தெரிவித்தார். அவர்கள் சந்தோஷ் பாஸ்வான், தீபக் மிஸ்ரா, ராமாவதார் யாதவ் மற்றும் சஞ்சய் யாதவ் என தெரியவந்துள்ளது.