பாகிஸ்தான் எல்லை அருகே ரூ.30 கோடி மதிப்பிலான போதைப்பொருள் பறிமுதல் - 2 பேர் கைது
|போதைப்பொருள் கடத்தல் தொடர்பாக 2 நபர்களை எல்லை பாதுகாப்பு படையினர் கைது செய்துள்ளனர்.
ஜெய்ப்பூர்,
ராஜஸ்தான் மாநிலம் ஸ்ரீகங்காநகர் பகுதியில் இந்தியா-பாகிஸ்தான் எல்லை அருகே போதைப்பொருள் கடத்தப்படுவதாக உளவுத்துறை மூலம் எல்லை பாதுகாப்பு படையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. இதன் அடிப்படையில் அந்த பகுதியில் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டது.
அப்போது பாகிஸ்தானில் இருந்து வந்த டிரோன் மூலம் இந்திய எல்லைப் பகுதிக்குள் போதைப்பொருள் கொண்டு வரப்படுவதை கண்ட எல்லை பாதுகாப்பு படையினர், அந்த டிரோனை சுட்டு வீழ்த்தினர். அதில் இருந்து கடத்தி வரப்பட்ட 6 கிலோ ஹெராயின் போதைப்பொருளை அவர்கள் பறிமுதல் செய்தனர்.
இந்த போதைப்பொருளை அங்கிருந்து கடத்திச் செல்வதற்காக வந்த கும்பலை எல்லை பாதுகாப்பு அதிகாரிகள் துரத்திய போது 2 பேர் மட்டும் பிடிபட்டதாகவும், மற்ற இருவர் தப்பியோடியதாகவும் கூறப்படுகிறது. கடத்தல்காரர்கள் பயன்படுத்திய காரை பறிமுதல் செய்த போலீசார், தப்பியோடிய நபர்களை அடையாளம் காணும் பணியில் ஈடுபட்டுள்ளனர். மேலும் விசாரணைக்கு பிறகு மேற்கொண்டு தகவல்கள் தெரிய வரும் என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.