< Back
தேசிய செய்திகள்
பெங்களூருவில் விற்க முயன்ற ரூ.7 கோடி போதைப்பொருட்கள் பறிமுதல்
தேசிய செய்திகள்

பெங்களூருவில் விற்க முயன்ற ரூ.7 கோடி போதைப்பொருட்கள் பறிமுதல்

தினத்தந்தி
|
9 May 2023 12:15 AM IST

பெங்களூருவில் விற்பனை செய்ய முயன்ற ரூ.7 கோடி மதிப்பிலான போதைப்பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இதுதொடர்பாக 19 வியாபாரிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

பெங்களூரு:

பெங்களூருவில் விற்பனை செய்ய முயன்ற ரூ.7 கோடி மதிப்பிலான போதைப்பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இதுதொடர்பாக 19 வியாபாரிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

19 வியாபாரிகள் கைது

பெங்களூருவில் போதைப்பொருட்கள் விற்பனை மற்றும் பயன்படுத்துவோர் மீது போலீசார் பாரபட்சம் இன்றி நடவடிக்கை எடுத்து வருகிறார்கள். இந்த நிலையில், பெங்களூருவில் சட்டசபை தேர்லையொட்டி போதைப்பொருட்கள் விற்பனை செய்வதை தடுக்கவும், விற்பனை செய்வோரை கைது செய்யவும் மத்திய குற்றப்பிரிவு போலீசார் தீவிரம் காட்டி வந்தனர்.

இந்த நிலையில், பெங்களூரு அசோக்நகர், ஹெண்ணூரு, புலிகேசிநகர், கே.ஆர்.புரம், எலகங்கா, ஆர்.டி.நகர், பானசவாடி, வில்சன்கார்டன், சித்தாபுரா ஆகிய போலீஸ் எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் போதைப்பொருட்களை விற்பனை செய்ய முயன்ற 19 வியாபாரிகளை மத்திய குற்றப்பிரிவு போலீசார் கைது செய்துள்ளனர். அவர்கள் அனைவரும் போதைப்பொருட்கள் விற்பனை செய்வதை தொழிலாக வைத்திருந்ததும் தெரியவந்துள்ளது.

ரூ.7 கோடி போதைப்பொருட்கள்

அந்த வியாபாரிகளிடம் இருந்து ஒட்டு மொத்தமாக ரூ.7 கோடியே 6 லட்சம் மதிப்பிலான போதைப்பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. அதாவது 6 கிலோ ஆசிஷ் ஆயில், 52 கிலோ கஞ்சா, 140 கிராம் எம்.டி.எம்.ஏ. பவுடர், 236 கிராம் போதை மாத்திரைகள், 34 எல்.எஸ்.டி. போதைப்பொருள் (பேப்பர் மாதிரியானது), 23 கிராம் கொகைன், 17 செல்போன்கள், ஒரு மோட்டார் சைக்கிள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

இதில், அதிகபட்சமாக வில்சன்கார்டன் போலீஸ் எல்லைக்கு உட்பட்ட பகுதியில் போதைப்பொருட்கள் விற்க முயன்ற 2 பேரை கைது செய்து, அவர்களிடம் இருந்து மட்டும் 5 கோடி மதிப்பிலான போதைப்பொருட்களை மத்திய குற்றப்பிரிவு போலீசார் பறிமுதல் செய்துள்ளனர். கைதான 19 பேர் மீதும் சம்பந்தப்பட்ட போலீஸ் நிலையங்களில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

மேலும் செய்திகள்