< Back
தேசிய செய்திகள்
கஞ்சா பயன்படுத்திய விவகாரம்; மேலும் 2 மருத்துவ மாணவர்கள் சிக்கினர்
தேசிய செய்திகள்

கஞ்சா பயன்படுத்திய விவகாரம்; மேலும் 2 மருத்துவ மாணவர்கள் சிக்கினர்

தினத்தந்தி
|
14 Jan 2023 12:15 AM IST

கஞ்சா பயன்படுத்திய விவகாரத்தில் மேலும் 2 மருத்துவ மாணவர்கள் சிக்கினர்.

மங்களூரு:

தட்சிண கன்னடா மாவட்டம் மங்களூருவில் போதைப்பொருட்கள் பயன்படுத்தியது மற்றும் விற்பனை செய்ததாக தமிழகம், ஆந்திரா, கேரளா ஆகிய மாநிலங்களை சேர்ந்த டாக்டர்கள், மருத்துவ மாணவர்கள் உள்பட 13 பேர் இதுவரை கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்கள் பிற மாநிலங்களில் இருந்து கஞ்சாவை வாங்கி ஒன்றாக அமர்ந்து புகைத்து வந்ததும், பணம் சம்பாதிக்கும் நோக்கில் அதை விற்பனை செய்ததும் தெரிந்தது. இதையடுத்து சம்பவம் குறித்து மங்களூரு போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த வழக்கில் மேலும் பலருக்கு தொடர்பு இருக்கும் என கூறப்படுகிறது.

இந்த நிலையில் கஞ்சா பயன்படுத்தியதாக மருத்துவ மாணவர்கள் உள்பட மேலும் 2 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். இதுகுறித்து மங்களூரு மாநகர போலீஸ் கமிஷனர் சசிகுமார் கூறுகையில், மங்களூருவில் அறை எடுத்து, மருத்துவம் படித்து வந்த மாணவர்கள், டாக்டர்கள் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர். தற்போது இதில் தொடர்புடையதாக ஆந்திர மாநிலத்தை சேர்ந்த ராகவ தத்தா (வயது 28), பெங்களூருவை சேர்ந்த பாலாஜி ஆகிய 2 பேர் கைதாகி உள்ளனர். அவர்களிடம் தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

மேலும் செய்திகள்