போதைப்பொருள் கடத்தல்காரர்களுடன் தொடர்பில் இருந்த மருந்து ஆய்வாளர் கைது
|பஞ்சாபில் போதைப்பொருள் கடத்தல்காரர்களுடன் தொடர்பில் இருந்த மருந்து ஆய்வாளர் கைது செய்யப்பட்டுள்ளார்.
சண்டிகார்,
பஞ்சாபில் உள்ள சண்டிகார் நகரில் போதைப்பொருள் கடத்தல் நடவடிக்கைகளுக்கு உதவியதாகவும், சிறையில் அடைக்கப்பட்ட போதைப்பொருள் கடத்தல்காரர்களுடன் மருந்து ஆய்வாளரும் தொடர்பிலிருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது.
இதனைத் தொடர்ந்து, மருந்து ஆய்வாளரிடம் நடத்தப்பட்ட விசாரணையில், சிறையில் அடைக்கப்பட்ட கடத்தல்காரர்களுடன் தொடர்பில் இருந்ததுடன், அவர்களுக்காக கைக்கூலியாக இருந்து வந்ததும் தெரிய வந்தது. சட்டவிரோத மருந்துகள், மருந்தகங்கள், போதைப்பொருள் பணத்தை பதுக்குவது தொடர்பான போதைப்பொருள் கடத்தல் நடவடிக்கைகளில் ஆய்வாளர் ஈடுபட்டுள்ளார்.
அதுமட்டுமின்றி, சிறையில் அடைக்கப்பட்ட கடத்தல்காரர்கள், வெளியே நடத்தும் போதைப்பொருள் வியாபார வலையமைப்பையும் எளிதாக்கி தந்துள்ளார். இதனையடுத்து, ஆய்வாளரிடம் நடத்தப்பட்ட சோதனையின் மூலம், அவரிடமிருந்து 1.49 கோடி ரூபாய் ரொக்கமும், 260 கிராம் தங்கமும் பறிமுதல் செய்யப்பட்டது. இதுதவிர, 7.09 கோடி ரூபாய் மதிப்புள்ள 24 வங்கிக் கணக்குகள் முடக்கம் செய்யப்பட்டதுடன், இரண்டு வங்கி லாக்கர்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. மேலும், ஜிராக்பூர் மற்றும் தப்வாலியில் 2.40 கோடி ரூபாய் மதிப்புள்ள ரியல் எஸ்டேட் உள்பட சட்டவிரோத நடவடிக்கைகளின் மூலம் பெறப்பட்ட கணிசமான சொத்துக்களும் அடையாளம் காணப்பட்டுள்ளன. இதையடுத்து, மருந்து ஆய்வாளரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர் என்று டிஜிபி கவுரவ் யாதவ் தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.