< Back
தேசிய செய்திகள்
போதைப்பொருள் இல்லாத இந்தியா - மத்திய அரசு சபதம்
தேசிய செய்திகள்

போதைப்பொருள் இல்லாத இந்தியா - மத்திய அரசு சபதம்

தினத்தந்தி
|
26 March 2023 1:28 AM IST

போதைப்பொருள் இல்லா இந்தியாவை உருவாக்க மத்திய அரசு சபதம் ஏற்றுள்ளது. கடந்த 9 ஆண்டுகளில் ரூ.22 ஆயிரம் கோடி போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

போர் தொடுத்துள்ளது

நாட்டில் போதைப்பொருள் விற்பனை, பயன்பாடு என எல்லாவற்றுக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது. ஆனாலும் போதைப்பொருள் நடமாட்டம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அண்டை நாடான பாகிஸ்தான் உள்ளிட்ட பிற நாடுகளில் இருந்து போதைப்பொருள் கள்ளத் தோணி மூலம் இந்தியாவுக்கு கடத்தி வருகிறார்கள். இந்த போதைப்பொருள் பொதுமக்களை குறிப்பாக இளம் சமுதாயத்தினரின் எதிர்காலத்தை பாழாக்குகிறது. இது நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கும் பெரும் சவாலாக திகழ்கிறது.

பெரு நகரங்களில் பள்ளி-கல்லூரி மாணவர்களுக்கு ரகசியமாக போதைப்பொருள் விற்பனை செய்யப்படுகிறது. அதனால் போதைப்பொருள் நடமாட்டத்தை தடுக்க மத்திய-மாநில அரசுகள் தீவிரமான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. அதையும் மீறி போதைப்பொருள் நடமாட்டம் இருந்து தான் வருகிறது. போதைப்பொருளுக்கு எதிராக பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு போர் தொடுத்துள்ளது என்று கூறலாம்.

மண்டல மாநாடு

இத்தகைய சூழ்நிலையில் உள்துறை மந்திரி அமித்ஷா தலைமையில் மண்டல மாநாடு பெங்களூருவில் நடைபெற்றது. இதில் கர்நாடக முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை, போலீஸ் மந்திரி அரக ஞானேந்திரா மற்றும் பிற மாநிலங்களின் உயர் அதிகாரிகள் கலந்துகொண்டனர். இந்த மாநாட்டில் போதைப்பொருள் கடத்தலை தடுப்பது, நாட்டின் பாதுகாப்பு உள்ளிட்ட அம்சங்கள் குறித்து விரிவாக ஆலோசிக்கப்பட்டது.

மத்திய அரசு, போதைப்பொருளுக்கு எதிராக 'மொத்த அரசும் அணுகுதல்' என்ற முறையில் செயல்பட்டு வருகிறது. இந்த தீவிர நடவடிக்கை காரணமாக 100 சதவீதத்திற்கும் மேல் போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. 181 சதவீதத்திற்கும் மேற்பட்ட வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. போதைப்பொருள் கடத்தல், விற்பனை தொடர்பாக கடந்த 2006 முதல் 2013-ம் ஆண்டு வரை 1,363 பேர் கைது செய்யப்பட்டனர். 1.52 லட்சம் கிலோ போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டது. அதன் மொத்த மதிப்பு ரூ.768 கோடி ஆகும்.

போதைப்பொருள் அழிப்பு

பிரதமர் மோடி ஆட்சி பொறுப்பேற்ற 2014 முதல் 2022-ம் ஆண்டு வரை 5 ஆயிரத்து 408 பேர் கைது செய்யப்பட்டு 3.73 லட்சம் கிலோ போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டது. அவற்றின் மதிப்பு ரூ.22 ஆயிரம் கோடி ஆகும். மத்தியில் பா.ஜனதா ஆட்சி அமைந்த பிறகு போதைப்பொருள் வழக்குகள் பதிவு 181 சதவீதம் அதிகரித்துள்ளது. கடத்தலில் ஈடுபட்டவர்களை கைது செய்யும் நடவடிக்கை 296 சதவீதம் உயர்ந்தது. பறிமுதல் செய்யப்பட்ட போதைப்பொருளின் மதிப்பு 30 மடங்கு அதிகரித்துள்ளது.

நமது நாட்டில் கடந்த 2022-ம் ஆண்டு ஜூன் மாதம் 1-ந்தேதி முதல் இது வரை பறிமுதல் செய்யப்பட்ட ரூ.11 ஆயிரத்து 548 கோடி மதிப்புள்ள போதைப்பொருள் அழிக்கப்பட்டது. அதே போல் போதைப்பொருள் தயாரிக்கப் பயன்படும் தாவரங்கள் வளர்ப்பதை கண்டுபிடித்து அழிக்கப்பட்டன. கடந்த 2020-ம் ஆண்டு 21 ஆயிரத்து 559 ஏக்கரிலும், 2021-ம் ஆண்டு 34 ஆயிரத்து 866 ஏக்கரிலும், 2022-ம் ஆண்டு 26 ஆயிரத்து 344 ஏக்கரிலும் போதைப்பொருள் பயிர்கள் அழிக்கப்பட்டுள்ளன.

கடந்த 2019-ம் ஆண்டு மே 31-ந்தேதி முதல் 2022-ம் ஆண்டு டிசம்பர் 31-ந்தேதி வரையிலான 3 ஆண்டு காலத்தில் ஒட்டுமொத்தமாக 2 லட்சத்து 38 ஆயிரம் கிலோ போதைப்பொருட்கள் மற்றும் மனநோயை ஏற்படுத்தும் போதைப்பொருட்கள் (சைக்கோ டிரோபிக்) பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.


உறுதிமொழி ஏற்பு

சுதந்திர தின பவள விழாவையொட்டி 75 நாட்களில் 75 ஆயிரம் கிலோ போதைப்பொருளை அழிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டு இருந்தது. இந்த இலக்கு குறித்த காலத்திற்கு முன்பே எட்டப்பட்டது. போதைப்பொருள் தடுப்பு படைக்கு புதிதாக 5 புதிய கோட்ட அலுவலகங்கள், 4 மண்டல அலுவலகங்கள், 12 துணை மண்டலங்கள் மேம்படுத்தல், போதைப்பொருள் நுண்ணறிவு பிரிவு, விசாரணை பிரிவு, சைபர் பிரிவு போன்றவை தொடங்கப்பட்டுள்ளன.

போதைப்பொருள் தடுப்பு படை, போதைப்பொருளுக்கு எதிரான பிரசாரத்துடன் ஆன்லைன் மூலம் போதைப்பொருளுக்கு எதிராக உறுதிமொழி ஏற்பு நிகழ்வையும் தொடங்கியுள்ளது. இதற்கு மக்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. அவ்வாறு இதுவரை 30 லட்சம் பேர் அவற்றுக்கு எதிராக உறுதிமொழி எடுத்துள்ளனர்.

விழிப்புணர்வு இயக்கங்கள்

போதைப்பொருள் இல்லாத இந்தியாவை உருவாக்கும் திட்டத்தில் நாடு முழுவதும் 372 மாவட்டங்களில் போதைப்பொருளுக்கு எதிராக விழிப்புணர்வு இயக்கங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதன் மூலம் 3.12 கோடி இளைஞர்கள், 2.06 கோடி பெண்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டுள்ளது. போதைப்பொருளுக்கு அடிமையானவர்களை மீட்டெடுக்க 340 ஒருங்கிணைந்த மறுவாழ்வு மையங்கள் அமைக்கப்பட்டு செயல்பட்டு வருகின்றன. இவற்றுக்கு தேவையான உதவிகளை மத்திய அரசு செய்து வருகிறது.

டெல்லி எய்ம்ஸ் ஆஸ்பத்திரி மூலம் போதைப்பொருளால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்கும் 46 மையங்கள் செயல்பட்டு வருகின்றன. மேலும் போதைப்பொருள் தடுப்பு படை, புகழ் பெற்ற நடிகர்-நடிகைகள், விளையாட்டு வீரர்களை பயன்படுத்தி விளம்பரங்கள் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. முகநூல் உள்ளிட்ட சமூக வலைத்தளங்கள் மூலமும் விழிப்புணர்வு ஏற்படுத்தும் பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன. போதைப்பொருளால் ஏற்படும் ஆபத்துகள் குறித்து குறும்படம் தயாரிக்கப்பட்டு அது 9 மொழிகளில் வெளியிடப்பட்டுள்ளது. அது சமூக வலைத்தளத்திலும் பதிவேற்றம் செய்யப்பட்டு இருக்கிறது. மொத்தத்தில் போதைப்பொருள் இல்லா இந்தியாவை உருவாக்க மத்திய அரசு சபதம் ஏற்றுள்ளது. வருகிற 2047-ம் ஆண்டுக்குள் இந்த இலக்கை எட்ட மத்திய அரசு உறுதியான நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது.

கடல் வழியாக கடத்தல்

இந்தியாவுக்கு போதைப்பொருட்கள் 60 முதல் 70 சதவீதம் கடல் வழியாக கடத்தி வரப்படுகின்றன. இதை தடுக்க தேசிய பாதுகாப்பு கவுன்சில் செயலகத்தில் உயர்மட்ட தடுப்பு படை உருவாக்கப்பட்டுள்ளது. இதில் துறைமுக-நீர்வழி, கடற்படை, கடலோர பாதுகாப்பு படை, மறைமுக வரிகள் வாரியம், கலால், கடலோர போலீஸ், மாநில கடலோர வாரியம், துறைமுக ஆணைய அதிகாரிகள் இடம் பெற்றுள்ளனர். சந்தேகத்திற்கு இடமளிக்கும் கண்டெய்னர்கள் 100 சதவீதம் ஸ்கேன் செய்யப்படுகின்றன. வெளிநாட்டு அமைப்புகளுடன் அதாவது ஆஸ்திரேலியா போலீஸ், ராயல் கனடியன் போலீஸ் உள்ளிட்ட அமைப்புகளுடனும் ஒருங்கிணைந்து போதைப்பொருள் கடத்தலை தடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

* போதைப்பொருள் கடத்தல் மூலம் சேர்த்த நபர்களின் சொத்துகள் முடக்கப்பட்டுள்ளன. ஹவாலா மூலம் பண பரிவர்த்தனை மேற்கொள்ளப்படும் வழிகளும் கண்டறியப்பட்டுள்ளன. இதுகுறித்து தகவல்கள் அமலாக்கத்துறை போன்ற விசாரணை அமைப்புகளுடன் பகிர்ந்து கொள்ளப்பட்டுள்ளன. கடந்த 2022-ம் ஆண்டு 27 வழக்குகளில் நிதி பரிவர்த்தனை குறித்து விசாரணை நடத்தப்பட்டது. இதில் ரூ.15 கோடியே 98 லட்சத்து 37 ஆயிரத்து 784 மதிப்புள்ள சொத்துக்கள் முடக்கப்பட்டுள்ளன.

* இந்தியாவில் கடந்த 2020-ம் ஆண்டு முதல் 2022-ம் ஆண்டு வரை 3 ஆண்டுகளில் டார்க்நெட் மற்றும் கிரிப்டோகரன்சி மூலம் சட்டவிரோதமாக போதைப்பொருள் வர்த்தகம் நடைபெற்றுள்ளது. இதை போதைப்பொருள் தடுப்பு படை கண்டுபிடித்து 59 வழக்குகளை பதிவு செய்துள்ளது. மேலும் இதுபோன்ற இணைய வழி போதைப்பொருள் வர்த்தகத்தை தடுக்க தகவல் நடைமுறை அமைப்பு தேவைப்படுகிறது. இந்த வர்த்தகத்தை தடுக்க சப் மேக் என்ற இணைய பக்கம் தொடங்கப்பட்டுள்ளது. இதில் இதுதொடர்பான தகவல்கள் பதிவிடப்பட்டு வருகின்றன.

* போதைப்பொருள் தடுப்பு படை உள்கட்டமைப்பை மேம்படுத்துவதற்காக ரூ.411.59 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. இதற்கு கடந்த பிப்ரவரி மாதம் 2023-ம் ஆண்டு பாதுகாப்பு தொடர்பான மந்திரி சபை கமிட்டி ஒப்புதல் வழங்கியது.

* பெங்களூரு, இந்தூர், புவனேஸ்வர் மற்றும் கவுகாத்தி ஆகிய நகரங்களில் போதைப்பொருள் தடுப்பு பிரிவு அலுவலகம் திறக்க ரூ.65.60 கோடியை மத்திய உள்துறை அமைச்சகம் ஒதுக்கியது. இந்தூர்-புவனேஸ்வரில் பணிகள் முடிவடைந்துவிட்டது. கவுகாத்தியில் மட்டும் பணிகள் நடைபெற்று வருகின்றன.

மேலும் செய்திகள்