போதைப்பொருட்கள் விற்ற பெண் உள்பட 2 பேர் கைது
|பெங்களூருவில் போதைப்பொருள் விற்ற பெண் உள்பட ௨ பேர் கைது செய்யப்பட்டனர்.
பெங்களூரு:
பெங்களூருவில் பரப்பன அக்ரஹாரா போலீஸ் எல்லைக்கு உட்பட்ட பகுதியில் போதைப்பொருட்கள் விற்பனை நடப்பதாக மத்திய குற்றப்பிரிவு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் போலீசார் பரப்பன அக்ரஹாரா பகுதியில் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த பகுதியில் சந்தேகப்படும் படியாக 2 பேர் சுற்றித்திரிந்தனர்.அவர்களை பிடித்து போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர்கள் விஷ்ணுபிரியா மற்றும் சிகில் வர்கீஸ் ஆகியோர் என்பது தெரியவந்தது. அவர்கள் அந்த பகுதியில் நின்று கொண்டு போதைப்பொருட்கள் விற்று வந்தது தெரியவந்தது.
மேலும், இவர்கள் 2 பேரும் கேரளா, மங்களூரு உள்ளிட்ட பகுதிகளில் இருந்து போதைப்பொருட்களை வாங்கி வந்து பெங்களூருவில் கூடுதல் விலைக்கு விற்று பணம் சம்பாதித்து வந்தது தெரியவந்தது. குறிப்பாக கல்லூரி மாணவர்களை குறிவைத்து போதைப்பொருட்கள் விற்பனை செய்து வந்துள்ளனர். உளிமாவு போலீஸ் எல்லைக்கு உட்பட்ட பகுதியில் போதைப்பொருட்கள் விற்றதாக அவர்கள் 2 பேரும் கைது செய்யப்பட்டு, கடந்த சில நாட்களுக்கு முன்பு ஜாமீனில் வெளியே வந்துள்ளனர். தற்போது அவர்கள் போதைப்பொருட்கள் விற்றதாக மீண்டும் பிடிபட்டுள்ளனர். அவர்கள் 2 பேர் மீதும் பரப்பன அக்ரஹாரா போலீஸ் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இதையடுத்து அவர்கள் கைது செய்யப்பட்டனர். மேலும், அவர்களிடம் இருந்து எம்.டி.எம்.ஏ. போதை மாத்திரைகள், 2 செல்போன்கள், ஒரு மோட்டார் சைக்கிள் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன.