திரவுபதி என் இயற்பெயர் அல்ல! என் ஆசிரியர் எனக்கு வைத்த பெயர் - புதிய ஜனாதிபதி பகிர்ந்த தகவல்
|எனது ஆசிரியர் எனக்கு வைத்த பெயர்தான் திரவுபதி என்று ஜனாதிபதி திரவுபதி முர்மு தெரிவித்திருக்கிறார்.
புதுடெல்லி,
"என் இயற்பெயர் திரவுபதி அல்ல. எனது ஆசிரியர் எனக்கு வைத்த பெயர்தான் திரவுபதி" என்று ஜனாதிபதி திரவுபதி முர்மு தெரிவித்திருக்கிறார்.
ஒடியா வீடியோ இதழுக்கு அவர் அளித்த பேட்டியில் கூறியதாவது;-
எனது இயற்பெயர் திரவுபதி அல்ல. என் இயற்பெயர் புதி. என்னுடைய வகுப்பு ஆசிரியருக்கு என் பெயர் பிடிக்கவில்லை. அதனால் திரவுபதி என என் பெயரை மாற்றினார்.
எனது ஆசிரியர் எங்கள் பழங்குடி பகுதியைச் சேர்ந்தவர் அல்ல. அவர் வேறு மாவட்டத்தைச் சேர்ந்தவர். எங்கள் ஊர் வழக்கப்படி பெண் குழந்தை பிறந்தால், பாட்டியின் பெயர் வைப்பார்கள்; ஆண் குழந்தை பிறந்தால் தாத்தா பெயர் வைப்பார்கள்.
மேலும் என்னுடைய பெயர் பலமுறை மாற்றப்பட்டுள்ளது. துர்பதி, தோர்பதி இன்னும் சில... என மாற்றம் செய்யப்பட்டது.
என்னுடைய பள்ளி மற்றும் கல்லூரி காலங்களில் என்னுடைய துணை பெயராக 'துடு' என்று அழைத்தனர். நான் ஷியாம் சரண் துடுவை திருமணம் செய்த பிறகு, முர்மு என்பதை பெயருடன் சேர்த்துக் கொண்டேன் என்று அவர் அளித்த பேட்டியில் கூறி உள்ளார்.