ஒரு நாள் ஆசிரியராக மாறிய ஜனாதிபதி திரவுபதி முர்மு
|நாம் அதிக மரங்களை நட வேண்டும் என மாணவர்களுக்கு அறிவுரை வழங்கினார்.
புதுடெல்லி,
நம் இந்திய திருநாட்டின் ஜனாதிபதியாக பொறுப்பேற்று மூன்றாம் ஆண்டில் திரவுபதி முர்மு அடியெடுத்து வைத்துள்ளார். பெண்களுக்கு முதன்மை ஊக்க சக்தியாகவும், உதாரணமாகவும் திகழும் அவருக்கு அரசியல் தலைவர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
இந்தநிலையில், டெல்லியில் ஜனாதிபதி தோட்டத்தில் உள்ள டாக்டர் ராஜேந்திர பிரசாத் கேந்திரிய வித்யாலயாவின் 9-ம் வகுப்பு பள்ளி மாணவர்களுடன் ஜனாதிபதி திரவுபதி முர்மு ஆசிரியையாக மாறி கலந்துரையாடினார்.
மாணவர்களுடனான உரையாடலின்போது ஜனாதிபதி. மாணவர்களின் லட்சியங்கள் மற்றும் அவர்கள் விரும்பும் பாடங்களை பற்றி கேட்டறிந்தார். மாணவர்கள் விஞ்ஞானிகள், மருத்துவர்களாக விரும்புகிறார்கள் என்பதை அறிந்த பின்னர் அவர் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்.
புவி வெப்பமடைதல் குறித்து மாணவர்களுடன் உரையாடிய ஜனாதிபதி, நீர் பாதுகாப்பின் அவசியத்தை வலியுறுத்தினார். காலநிலை மாற்றத்தின் தாக்கத்தை குறைக்கும் முயற்சியில் அதிக மரங்களை நடுமாறு மாணவர்களை ஊக்குவித்தார்.
நாம் அதிக மரங்களை நட வேண்டும். மழைநீர் சேகரிப்பு மூலம் தண்ணீர் வீணாவதை குறைக்கவும் அதை பாதுகாக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் காற்று மாசுபாடு குறித்தும், அதை குறைப்பதற்கான வழிகள் குறித்தும் அவர் உரையாடினார்.