பஞ்சாப்பில் சுட்டு வீழ்த்தப்பட்ட டிரோன்: பாகிஸ்தான், சீனாவில் பயன்படுத்தப்பட்டது - எல்லை பாதுகாப்பு படை தகவல்
|பஞ்சாப்பில் சுட்டு வீழ்த்தப்பட்ட டிரோன், பாகிஸ்தான் மற்றும் சீனாவில் பயன்படுத்தப்பட்டது என்று எல்லை பாதுகாப்பு படை தகவல் தெரிவித்துள்ளது.
புதுடெல்லி,
பாகிஸ்தானில் இருந்து சர்வதேச எல்லையை ஊடுருவி பஞ்சாப்புக்குள் அடிக்கடி டிரோன்கள் நுழைந்து வருகின்றன. ஆயுதங்கள் மற்றும் போதைப்பொருட்களுடன் வரும் இந்த டிரோன்களை அடிக்கடி எல்லை பாதுகாப்பு படையினர் சுட்டு வீழ்த்தி வருகின்றனர். அந்தவகையில் கடந்த டிசம்பர் 25-ந்தேதி பஞ்சாப்பின் அமிர்தசரஸ் மாவட்டத்தின் ராஜட்டால் எல்லைப்பகுதியில் டிரோன் ஒன்று சுட்டு வீழ்த்தப்பட்டது.
பின்னர் இந்த டிரோனின் பாகங்களை தடயவியல் அதிகாரிகள் ஆய்வு செய்தனர். இதில் இந்த டிரோன் சீனா மற்றும் பாகிஸ்தானில் பயன்படுத்தப்பட்டது கண்டறியப்பட்டு உள்ளது. அந்தவகையில் இந்த டிரோன் கடந்த ஆண்டு ஜூன் 11-ந்தேதி ஷாங்காயின் பென்சியான் மாவட்டத்தில் பறந்திருக்கிறது.
மேலும் கடந்த செப்டம்பர் 24 முதல் டிசம்பர் 25-ந்தேதி வரை பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தின் கனேவால் மாவட்டத்தில் 28 முறை பறந்திருப்பது தெரியவந்துள்ளது.
இந்த தகவல்களை எல்லை பாதுகாப்பு படையினர் தற்போது வெளியிட்டு உள்ளனர். கடந்த ஆண்டு மட்டும் 22 டிரோன்கள் பஞ்சாப் எல்லையில் சுட்டு வீழ்த்தப்பட்டதாக கூறியுள்ள அதிகாரிகள், இது தொடர்பாக தொடர்ந்து விசாரணை நடந்து வருவதாகவும் தெரிவித்தனர்.