இந்திய எல்லையில் வீழ்த்தப்பட்ட ஆளில்லா விமானம்; சீனா, பாகிஸ்தானிலும் பறந்த அதிர்ச்சி தகவல் வெளியீடு
|இந்திய எல்லையில் சுட்டு வீழ்த்தப்பட்ட ஆளில்லா விமானம் சீனா மற்றும் பாகிஸ்தானில் 29 இடங்களில் பறந்த அதிர்ச்சி தகவல் தெரிய வந்து உள்ளது.
புதுடெல்லி,
இந்தியா மற்றும் பாகிஸ்தான் எல்லை பகுதியில் ஏறக்குறைய 3 ஆயிரம் கி.மீ. பரப்பளவை பாதுகாக்கும் பணியில் எல்லை பாதுகாப்பு படையினர் ஈடுபட்டு வருகின்றனர். இந்திய எல்லை பகுதியில் அத்துமீறி நுழையும் ஆளில்லா விமானங்களை படையினர் சுட்டு வீழ்த்தி எல்லையில் தீங்கு விளைவிக்கும் செயல்களை முறியடித்து வருகின்றனர்.
இந்நிலையில், பாகிஸ்தானில் இருந்து பஞ்சாப்பின் அமிர்தசரஸ் நகருக்குள் கடந்த டிசம்பர் 25-ந்தேதி இரவு 7 மணியளவில் நாற்கரங்களுடன் கூடிய ஆளில்லா விமானம் ஒன்று அத்துமீறி நுழைய முயன்றது. இதனை வீரர்கள் உடனடியாக சுட்டு வீழ்த்தினர். பின்னர், ரஜதல் கிராமம் அருகே அதனை கைப்பற்றினர்.
அதன்பின்பு, தடயவியல் ஆய்வுக்கு அந்த ஆளில்லா விமானம் உட்படுத்தப்பட்டது. சம்பவம் பற்றி எப்.ஐ.ஆர். ஒன்றும் பதிவானது. ஆய்வில், பாகிஸ்தானின் அந்த ஆளில்லா விமானம் கடந்த 2022-ம் ஆண்டு ஜூன் 11-ல் சீனாவின் பெங் ஜியான் மாவட்டத்தின் மீது பறந்து சென்றது தெரிய வந்து உள்ளது.
அதன்பின்னர், பாகிஸ்தானின் கனேவல் பகுதியில் பல இடங்களில், கடந்த ஆண்டு செப்டம்பர் 24-ந்தேதி முதல் டிசம்பர் 25-ந்தேதி வரை தொடர்ந்து 28 முறை பறந்து சென்று உள்ளதும் தெரிய வந்து உள்ளது.
இதனை எல்லை பாதுகாப்பு படையினர் வெளியிட்டு உள்ள அறிக்கை தெரிவிக்கின்றது. என்ன காரணங்களுக்காக, இந்திய வான் பரப்பில் அத்துமீறி அந்த ஆளில்லா விமானம் பறந்து சென்றது என்ற விவரங்கள் எதுவும் வெளியிடப்படவில்லை.