அரபிக்கடலில் வணிக கப்பல்கள் மீது ட்ரோன் தாக்குதல்கள் அதிகரிப்பு - இந்திய கடற்படை தகவல்
|வணிக கப்பல்கள் மீது நடக்கும் தாக்குதலின் எதிரொலியாக இந்திய கடற்படை 3 போர்க் கப்பல்களை அரபிக்கடலில் நிறுத்தியுள்ளது.
புதுடெல்லி,
கடல்சார் பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கும், ஏதேனும் விபத்து ஏற்பட்டால் வணிகக் கப்பல்களுக்கு உதவுவதற்கு போர்க்கப்பல்களை உள்ளடக்கிய கடற்படை பணிக்குழுக்கள் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன என இந்திய கடற்படை தகவல் தெரிவித்துள்ளது.
சமீபத்தில் இந்திய பெருங்கடல் பகுதியில், இஸ்ரேல் நிறுவனத்துக்கு சொந்தமான சரக்கு கப்பல் மீது, பயங்கரவாதிகள், 'ட்ரோன்' வாயிலாக தாக்குதல் நடத்தினர். இதையடுத்து, மத்திய ஆப்ரிக்க நாடான, காபோனுக்கு சொந்தமான, இந்திய தேசியக் கொடியுடன் கூடிய, 'எம்.வி.சாய் பாபா' என பெயரிடப்பட்ட கச்சா எண்ணெய் வணிக கப்பல் மீதும் ட்ரோன் எனப்படும் ஆளில்லா சிறிய ரக விமானம் வாயிலாக தாக்குதல் நடத்தப்பட்டது. வணிக கப்பல்கள் மீது நடக்கும் தாக்குதலின் எதிரொலியாக இந்திய கடற்படை 3 போர்க் கப்பல்களை அரபிக்கடலில் நிறுத்தியுள்ளது.
இந்தநிலையில், இது தொடர்பாக, இந்திய கடற்படை வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:
கடந்த சில வாரங்களாக, செங்கடல், ஏடன் வளைகுடா மற்றும் அரபிக்கடலில் வணிகக் கப்பல்கள் மீது ட்ரோன் தாக்குதல்கள் அதிகரித்துள்ளது. கடல்சார் பாதுகாப்பு பணிகளை மேற்கொள்வதற்கும், ஏதேனும் விபத்து ஏற்பட்டால் வணிகக் கப்பல்களுக்கு உதவி செய்வதற்கு, போர்க்கப்பல்களை உள்ளடக்கிய கடற்படை பணிக்குழுக்கள் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன. மத்திய அரபிக்கடல் உள்ளிட்ட பகுதிகளில் கண்காணிப்பு முடுக்கிவிடப்பட்டுள்ளது.
இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.