< Back
தேசிய செய்திகள்
பெண்ணை 25 முறை கத்தியால் குத்தி கொன்ற டிரைவர்: திருமணத்திற்கு மறுத்ததால் ஆத்திரம்
தேசிய செய்திகள்

பெண்ணை 25 முறை கத்தியால் குத்தி கொன்ற டிரைவர்: திருமணத்திற்கு மறுத்ததால் ஆத்திரம்

தினத்தந்தி
|
1 April 2024 7:02 AM IST

2 பிள்ளைகள் இருப்பதாக கூறி திருமணத்திற்கு மறுத்த பெண் கொடூரமாக கொலை செய்யப்பட்டுள்ளார்.

பெங்களூரு,

கர்நாடக மாநிலம் பெங்களூரு எடியூர் அருகே வசித்து வருபவர் கிரீஷ் என்ற ரியான் கான் (வயது 35). டிரைவரான இவர், பெங்களூருவில் கார் ஓட்டி வருகிறார். இவருக்கும், பெங்களூருவில் வசித்து வந்த கொல்கத்தாவை சேர்ந்த கணவரை இழந்த பரிதா கானம்(42) என்பவருக்கும் கடந்த 2022-ம் ஆண்டு பழக்கம் ஏற்பட்டு காதலாக மாறியது. பெங்களூரு ஜெயநகரில் உள்ள மசாஜ் சென்டரில் பரிதா கானம் வேலை பார்த்து வந்தார். பரிதா கானத்திற்கு 2 பிள்ளைகள் உள்ளனர். முதல் மகள் கல்லூரியில் படித்து வருகிறார்.

இந்த நிலையில், பரிதா கானத்தை திருமணம் செய்துகொள்ள கிரீஷ் முடிவு செய்திருந்தார். நேற்று முன்தினம் இரவு ஜெயநகரில் உள்ள ஷாலினி பூங்காவில் வைத்து கிரீஷ் மற்றும் பரிதா கானம் பேசிக் கொண்டு இருந்தார்கள். அப்போது மசாஜ் சென்டர் வேலையை விட்டுவிட்டு தன்னை திருமணம் செய்து கொள்ளும்படி கிரீஷ் கூறியுள்ளார். இதற்கு பரிதா கானம் தனக்கு 2 பிள்ளைகள் உள்ளதால் திருமணத்திற்கு மறுத்துள்ளார். இதனால் ஆத்திரம் அடைந்த கிரீஷ், தான் மறைத்து வைத்திந்த கத்தியால் பரிதா கானத்தை சரமாரியாக குத்தி கொலை செய்தார். பின்னர் நடந்த சம்பவங்களை கூறி, ஜெயநகர் போலீஸ் நிலையத்திற்கு சென்று கிரீஷ் சரண் அடைந்தார்.

இதையடுத்து அவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில், எடியூரில் வசித்து வரும் கிரீசுக்கு திருமணமாகவில்லை. இந்து மதத்தை சேர்ந்த அவர் கடந்த 2011-ம் ஆண்டு முஸ்லிம் மதத்திற்கு மாறி இருந்தார். தனது பெயரையும் ரியான் கான் என்று அவர் மாற்றி இருந்தார். கிரீசுக்கும், அவரது தங்கைக்கும் திருமணத்துக்கு வரன் கிடைக்காமல் தள்ளிபோன வண்ணம் இருந்துள்ளது. இதனால் மீண்டும் இந்து மதத்திற்கு கிரீஷ் மாறினார். இதற்கிடையில், கடந்த 2022-ம் ஆண்டு கிரீசுக்கு பரிதா கானத்துடன் பழக்கம் ஏற்பட்டு, காதலாக மாறி உள்ளது. திருமணத்திற்கு பரிதா கானம் மறுப்பு தெரிவிக்கவே அவரை 25 முறை கத்தியால் குத்தி கிரீஷ் கொடூரமாக கொலை செய்திருப்பதாக போலீசார் தெரிவித்தனர்.

மேலும் செய்திகள்