டிராக்டர் மீது டிரக் மோதி விபத்து: டிராக்டர் டிரைவர் உயிரிழப்பு
|டிராக்டர் மீது டிரக் மோதி ஏற்பட்ட விபத்தில் டிராக்டர் டிரைவர் பரிதாபமாக உயிரிழந்தார்.
ஹோஷியார்பூர்,
டிராக்டர் மீது டிரக் மோதியதில் டிரக் டயர்களுக்கு இடையில் சிக்கிய டிராக்டர் டிரைவர் 500 மீட்டர் தூரம் இழுத்துச் செல்லப்பட்டு பரிதாபமாக உயிரிழந்தார்.
முன்னதாக நேற்று ரூப்நகர் மாவட்டத்தில் உள்ள பங்லான் கேரா கிராமத்தைச் சேர்ந்த சுக்தேவ் சிங் (வயது 21) என்பவர் மணல் ஏற்றப்பட்ட டிராக்டரை ஓட்டிச் சென்றார். இந்த நிலையில் ஷாஹ்பூர் கிராமத்திற்கு அருகே சென்ற போது பின்னால் வந்த டிரக், டிராக்டர் மீது மோதியது. இதில் டிரக் டயர்களுக்கு இடையில் சிக்கி சுமார் 500 மீட்டர் வரை இழுத்துச் செல்லப்பட்ட சுக்தேவ் சிங் பரிதாபமாக உயிரிழந்தார்.
விபத்தைத் தொடர்ந்து, டிரக் டிரைவர் வாகனத்துடன் சம்பவ இடத்திலிருந்து தப்பி ஓடிவிட்டார். டிரக் டிரைவரைக் கைது செய்ய வலியுறுத்தி சுக்தேவ் சிங்கின் உறவினர்களும் உள்ளூர் மக்களும் அவரது சடலத்துடன் கிட்டத்தட்ட ஆறு மணி நேரம் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் அங்கு போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
இதையடுத்து டிரக் டிரைவரை விரைவில் கைது செய்வோம் என்று எஸ்பி மனோஜ் சிங் அவர்களை சமாதானப்படுத்தியதை அடுத்து அவர்கள் போராட்டத்தைக் கைவிட்டனர்.