கர்நாடகாவில் அரசு பெண் அதிகாரி கொலை.. டிரைவர் கைது
|சட்டவிரோத சுரங்கங்களுக்கு எதிராக அதிகாரி பிரதிமா பல்வேறு அதிரடி நடவடிக்கைகள் எடுத்துள்ளார்.
கர்நாடக மாநிலம் பெங்களூருவின் சுப்ரமணியபோரா பகுதியில் வசித்து வந்தவர் பிரதிமா (வயது 45). கர்நாடக அரசின் சுரங்கம் மற்றும் புவியியல் துறை துணை இயக்குனராக பணியாற்றி வந்தார்.
இந்நிலையில், அதிகாரி பிரதிமா நேற்று முன்தினம் இரவு அவரது வீட்டில் கொடூரமாக கொல்லப்பட்டார். கொலை நடந்தபோது பிரதிமாவின் கணவர் மற்றும் மகன் இருவரும் வீட்டில் இல்லை. ஷிவமோகா மாவட்டத்திற்கு சென்றிருந்தனர்.
நேற்று முன்தினம் இரவு பிரதிமாவை அவரது தம்பி செல்போனில் தொடர்பு கொண்டுள்ளார். போனை எடுக்காததால் மறுநாள் (ஞாயிற்றுக்கிழமை) காலையில் வீட்டுக்கு வந்துள்ளார். அப்போது பிரதிமா ரத்த வெள்ளத்தில் இறந்து கிடந்தது தெரியவந்தது. அவர் கொடுத்த தகவலின்படி போலீசார் விரைந்து வந்து விசாரணை நடத்தினர்.
விசாரணையின் முடிவில் பிரதிமாவின் கார் டிரைவர் இன்று கைது செய்யப்பட்டுள்ளார். கொலைக்கான காரணம் குறித்து அவரிடம் விசாரணை நடத்தப்படுகிறது.
மிகவும் துணிச்சலான அதிகாரியான பிரதிமாவுக்கு அதிகாரிகள் மத்தியில் நல்ல பெயர் இருந்தது. சட்டவிரோத சுரங்கங்களுக்கு எதிராக பல்வேறு அதிரடி நடவடிக்கைகள் எடுத்துள்ளார். இதனால் ஏற்பட்ட பகை காரணமாக கொலை நடந்ததா? என்ற கோணத்திலும் விசாரணை நடைபெறுகிறது.