போதையில் போக்குவரத்து காவலரை சுமார் 20 கிலோமீட்டர் தூரத்துக்கு காரில் இழுத்துச் சென்ற நபர்
|போதையில் 23 வயது இளைஞர் ஒருவர் நவி மும்பையின் பரபரப்பான பாம் பீச் சாலையில் போக்குவரத்துக் காவலரை சுமார் 20 கிலோமீட்டர் தூரத்துக்கு இழுத்துச் சென்றுள்ளார்.
மும்பை,
போதையில் 23 வயது இளைஞர் ஒருவர் நவி மும்பையின் பரபரப்பான பாம் பீச் சாலையில் போக்குவரத்துக் காவலரை சுமார் 20 கிலோமீட்டர் தூரத்துக்கு இழுத்துச் சென்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஆதித்ய பெண்டே என்ற குற்றம் சாட்டப்பட்ட நபர் வாஷியில் ஒரு போக்குவரத்து சிக்னலில் நிற்காமல் சென்றுள்ளார். இதையடுத்து அவரது காரை பணியில் இருந்த போக்குவரத்து காவலர் சித்தேஷ்வர் மாலி நிறுத்த முயன்றார். ஆனால் போதையில் இருந்த பெண்டே காரை நிறுத்தாமல் கிளப்பியதில் மாலி காரின் முன்பகுதியில் சிக்கி கொண்டார். கார் வேகமாக ஓட்டி செல்லப்பட்டது.
போக்குவரத்து காவலர் மாலி தனது கைளால் வாகனத்தை பிடித்துக் கொண்டார். பேனெட்டில் அவர் ஆபத்தான முறையில் சுமார் 20 கிலோ மீட்டர் தூரத்துக்கு இழுத்து செல்லப்பட்டார். இதையடுத்து அவரது காரைப் பின்தொடர்ந்து சென்ற மற்ற போலீசார் காரை மடக்கி பிடித்து போக்குவரத்து காவலரை காப்பாற்றினர்.
போதையில் இருந்த பெண்டேவை கைது செய்த போலீசார், அவர் மீது இந்திய தண்டனைச் சட்டம் பிரிவு 307 (கொலை முயற்சி), 353 (பொது ஊழியரை பணி செய்யவிடாமல் தடுக்கும் வகையில் தாக்குதல்) மற்றும் 279 (பொது வழியில் அவசரமாக வாகனம் ஓட்டுதல்) மற்றும் போதை மருந்துகள் மற்றும் மனோவியல் பொருட்கள் சட்டத்தின் விதிகளின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
இது தொடர்பான சிசிடிவி காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.