சரக்கு ஆட்டோ மீது லாரி மோதி தர்மபுரியை சேர்ந்த டிரைவர் சாவு
|சரக்கு ஆட்டோ மீது லாரி மோதியதில் தர்மபுரியை சேர்ந்த டிரைவர் உயிரிழந்தார்.
பெங்களூரு:-சரக்கு ஆட்டோ மீது லாரி மோதி தர்மபுரியை சேர்ந்த டிரைவர் சாவு
தமிழ்நாடு தர்மபுரி மாவட்டத்தை சேர்ந்தவர் ஹரீஷ் (வயது 31). டிரைவரான இவர், சரக்கு ஆட்டோ ஓட்டி வந்தார். நேற்று முன்தினம் அவர் சரக்குகளை ஏற்றிக் கொண்டு பெங்களூருவுக்கு வந்திருந்தார். அவருடன் தர்மபுரியை சேர்ந்த மாந்தேஷ் என்பவரும் உடன் வந்திருந்தார். நேற்று முன்தினம் இரவு அதே வாகனத்தில் பெங்களூருவில் இருந்து 2 பேரும் தமிழ்நாட்டுக்கு புறப்பட்டனர். பெங்களூரு எலெக்ட்ரானிக் சிட்டி மேம்பாலத்தில் வைத்து ஹரீஷ் வாகனம் திடீரென்று பழுதானது. இதையடுத்து, மேம்பாலத்திலேயே சரக்கு ஆட்டோவை நிறுத்திவிட்டு, அதனை சரி செய்யும் பணியில் 2 பேரும் ஈடுபட்டனர். நள்ளிரவு 11.45 மணியளவில் அதே மேம்பாலத்தில் வந்த ஒரு லாரி டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து சரக்கு ஆட்டோ மீது மோதியது. அத்துடன் மேம்பால தடுப்பு வேலியையும் இடித்து தள்ளியது. இந்த கோர விபத்தில் ஹரீஷ், மாந்தேஷ் மற்றும் லாரி டிரைவர் படுகாயம் அடைந்து உயிருக்கு போராடினார்கள். உடனடியாக 3 பேரையும் போலீசார் மீட்டு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். ஆனால் ஹரீஷ் மட்டும் இறந்து விட்டார். மற்ற 2 பேருக்கும் டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகிறார்கள். லாரியை டிரைவர் அதிவேகமாக ஓட்டியதே விபத்திற்கு காரணம் என்று போலீசார் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து எலெக்ட்ரானிக் சிட்டி போக்குவரத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.