அயோத்தியில் ராமர் கோவில் திறப்பு விழா: இந்துக்களின் கனவு நனவாகியுள்ளது- சந்திரசேகர ராவ் மகள் கவிதா டுவீட்
|தெலுங்கானா மாநிலத்துடன் இணைந்து ஒட்டுமொத்த நாடும் வரவேற்கிறது.
ஐதராபாத்,
அயோத்தி ராமர் கோவிலில் வரும் ஜனவரி மாதம் 22-ம் தேதி குழந்தை ராமர் சிலையை, கருவறையில் பிரதிஷ்டை செய்வதற்கான பணிகளை ஸ்ரீ ராம ஜென்மபூமி தீரத் ஷேத்ரா அறக்கட்டளை மேற்கொண்டு வருகிறது.
இதற்கான பூஜைகள் அடுத்த மாதம் 16-ம் தேதி தொடங்குகின்றன. இந்த விழாவுக்காக அனைத்து பிரிவுகளையும் சேர்ந்த 4,000 துறவிகளுக்கு ஸ்ரீ ராம ஜென்ம பூமி அறக்கட்டளை அழைப்பு விடுத்துள்ளது. இந்த விழாவில் பங்கேற்கும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் தங்குவதற்கான ஏற்பாடுகளை உள்ளூர் நிர்வாகத்தினர் செய்து வருகின்றனர்.
இது குறித்து எக்ஸ் தளத்தில் கருத்து தெரிவித்துள்ள தெலுங்கானா முன்னாள் முதல்-மந்திரி சந்திரசேகர ராவின் மகளும், பிஆர்எஸ் கட்சியின் மேலவை உறுப்பினருமான கவிதா, அயோத்தியில் ஸ்ரீ சீதாராமா சந்திர சுவாமி சிலை பிரதிஷ்டை செய்யப்படுவதன் மூலம் உலகில் உள்ள கோடிக்கணக்கான இந்துக்களின் கனவு நனவாகியுள்ளது. இதை தெலுங்கானா மாநிலத்துடன் இணைந்து ஒட்டுமொத்த நாடும் வரவேற்கிறது என குறிப்பிட்டுள்ளார்.