< Back
தேசிய செய்திகள்
திரவுபதி முர்மு இன்று பெங்களூரு வருகை தேவேகவுடாவை சந்தித்தும் ஆதரவு கேட்க முடிவு
தேசிய செய்திகள்

திரவுபதி முர்மு இன்று பெங்களூரு வருகை தேவேகவுடாவை சந்தித்தும் ஆதரவு கேட்க முடிவு

தினத்தந்தி
|
10 July 2022 5:46 AM IST

ஜனாதிபதி தோ்தலில் பா.ஜனதா சாா்பில் வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ள திரவுபதி முர்மு இன்று பெங்களூருவுக்கு வருகை தர உள்ளார்.

பெங்களூரு,

ஜனாதிபதி தோ்தலில் பா.ஜனதா சாா்பில் வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ள திரவுபதி முர்மு இன்று (ஞாயிற்றுக்கிழமை) பெங்களூருவுக்கு வருகை தர உள்ளார். தேவேகவுடாவையும் அவர் சந்தித்து ஆதரவு கேட்க உள்ளதாக கூறப்படுகிறது.

ஜனாதிபதி தேர்தல் வருகிற 18-ந் தேதி நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் பா.ஜனதா தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் திரவுபதி முர்மு வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ளார். இதையடுத்து, நாடு முழுவதும் அவர் சுற்றுப்பயணம் மேற்கொண்டு அரசியல் கட்சி தலைவர்களிடம் ஜனாதிபதி தேர்தலில் தனக்கு ஆதரவு அளிக்கும்படி பிரசாரம் செய்து வருகிறார். இந்த நிலையில், கர்நாடகத்தில் ஆதரவு திரட்ட திரவுபதி முர்மு இன்று(ஞாயிற்றுக்கிழமை) பெங்களூருவுக்கு வருகை தரஉள்ளார்.

பெங்களூரு எச்.ஏ.எல். விமான நிலையத்திற்கு இன்று காலையில் வருகை தரும் திரவுபதி முர்முவை முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை, முன்னாள் முதல்-மந்திரி எடியூரப்பா, மத்திய மந்திரிகள் பிரகலாத் ஜோஷி, பகவந்த் கூபா, பா.ஜனதா மாநில தலைவர் நளின்குமார் கட்டீல் உள்ளிட்டோர் வரவேற்க உள்ளனர். ஜனாதிபதி வேட்பாளராக அறிவிக்கப்பட்ட பின்பு முதல் முறையாக திரவுபதி முர்மு பெங்களூருவுக்கு வருகை தருவதால், அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்க பா.ஜனதாவினர் முடிவு செய்துள்ளனர்.

அதன்பிறகு, பெங்களூருவில் உள்ள ஓட்டலில் நடைபெறும் கூட்டத்தில் திரவுபதி முர்மு கலந்து கொள்ள உள்ளார். அங்கு வைத்து ஜனாதிபதி தேர்தலில் தனக்கு ஆதரவு அளிக்கும்படி பா.ஜனதா எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்களிடம் திரவுபதி முர்மு கேட்க உள்ளார். முன்னதாக அந்த ஓட்டலுக்கு திரவுபதி முர்மு வரும் போது, அவரை 2,500 பெண்கள் வரவேற்க உள்ளனர். ஜனாதிபதி தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதும், மேற்கு வங்காள முதல்-மந்திரி மம்தா பானர்ஜி ஏற்பாடு செய்திருந்த கூட்டத்தில் ஜனதாதளம்(எஸ்) கட்சியின் தேசிய தலைவர் தேவேகவுடா மற்றும் குமாரசாமி கலந்து கொண்டு இருந்தனர். பா.ஜனதா கூட்டணி சார்பில் திரவுபதி முர்மு வேட்பாளராக நிறுத்தப்பட்டதும், அவருக்கு ஆதரவு அளிக்க முடிவு செய்திருப்பதாக குமாரசாமி கூறி இருந்தார். இதையடுத்து, இன்று பெங்களூருவுக்கு வருகை தரும் திரவுபதி முர்மு, முன்னாள் பிரதமர் தேவேகவுடாவை சந்தித்து ஜனாதிபதி தேர்தலில் தனக்கு ஆதரவு அளிக்கும்படி கேட்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

மேலும் செய்திகள்