< Back
தேசிய செய்திகள்
உத்தரபிரதேசத்தில் காட்டாற்று வெள்ளத்தில் சிக்கிய பஸ்; 40 பயணிகள் மீட்பு
தேசிய செய்திகள்

உத்தரபிரதேசத்தில் காட்டாற்று வெள்ளத்தில் சிக்கிய பஸ்; 40 பயணிகள் மீட்பு

தினத்தந்தி
|
22 July 2023 7:13 PM GMT

உத்தரபிரதேசத்தில் அரசு பஸ் காட்டாற்று வெள்ளத்தில் சிக்கிய நிலையில், அதில் இருந்த பயணிகள் 40 பேரும் பத்திரமாக மீட்கப்பட்டனர்.

வெளுத்து வாங்கும் மழை

வடமாநிலங்களில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்து வருகிறது. உத்தரபிரதேசம், உத்தரகாண்ட் உள்ளிட்ட பல மாநிலங்களில் கனமழை வெளுத்து வாங்கி வருகிறது. இடைவிடாமல் கெட்டி வரும் பேய் மழையால் உத்தரபிரதேசத்தில் உள்ள பல ஆறுகளில் அபாய அளவை தாண்டி வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது.

ஆற்றில் திடீர் வெள்ளம்

இந்த நிலையில் நேற்று காலை உத்தரபிரதேசத்தின் பஹ்ரைச் மாவட்டத்தில் உள்ள ருபைதிஹா நகரில் இருந்து உத்தரகாண்டின் ஹரித்வாருக்கு அரசு பஸ் ஒன்று புறப்பட்டு சென்றது. பஸ்சில் பெண்கள் உள்பட 40 பயணிகள் இருந்தனர். இந்த பஸ் நஜிபாபாத்-ஹரித்தர் சாலையில் சென்று கொண்டிருந்தபோது, அங்குள்ள கொட்டாவாலி ஆற்றில் திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.

பயத்தில் அலறிய பயணிகள்

அப்போது ஆற்றின் நடுவே செல்லும் தரைப்பாலம் வழியாக சென்ற அரசு பஸ் காட்டாற்று வெள்ளத்தில் சிக்கிக்கொண்டது. இதனால் பஸ்சில் இருந்த பயணிகள் பயத்தில் அலறிதுடித்தனர். வேகமாகப் பாய்ந்த வெள்ளம், பஸ்சின் சக்கரங்களை மூடி கிட்டத்தட்ட ஜன்னல்களை அடைந்ததால், பஸ் கவிழும் நிலைக்கு சென்றது. எனினும் ஜேசிபி எந்திரம் மூலம் பஸ் இழுத்து நிறுத்தப்பட்டது.

பத்திரமாக மீட்கப்பட்டனர்

அதை தொடர்ந்து கனரக வாகனங்களின் உதவியுடன் பஸ்சில் இருந்த பயணிகள் அனைவரும் பத்திரமாக மீட்கப்பட்டனர். பஸ் வெள்ளத்தில் சிக்கியதும் உடனடியாக மீட்பு பணிகள் முடுக்கிவிடப்பட்டதால் பயணிகள் அனைவரும் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.

இதனிடையே அரசு பஸ் காட்டாற்று வெள்ளத்தில் சிக்கியது மற்றும் பஸ்சில் இருந்த பயணிகள் மீட்கப்பட்டபோது எடுக்கப்பட்ட வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.

மேலும் செய்திகள்