டிஜிட்டல் இந்தியா சட்ட வரைவு ஜூன் மாதம் வெளியிடப்படும் - மத்திய மந்திரி ராஜீவ் சந்திரசேகர் தகவல்
|டிஜிட்டல் இந்தியா சட்டத்தை இந்த ஆண்டே நடைமுறைக்குக் கொண்டு வர அரசு திட்டமிட்டுள்ளதாக மத்திய மந்திரி ராஜீவ் சந்திரசேகர் தெரிவித்துள்ளார்.
மும்பை,
மத்திய அரசின் மின்னணுவியல் மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை இணை மந்திரி ராஜீவ் சந்திரசேகர், மும்பையில் இன்று செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது அவர், டிஜிட்டல் இந்தியா சட்ட வரைவு வரும் ஜூன் மாதம் முதல் வாரத்தில் வெளியிடப்படும் என்று தெரிவித்தார்.
தகவல் தொழில்நுட்பத்தில் பெரும் புரட்சி ஏற்பட்டுள்ளதை கருத்தில் கொண்டு அதற்கேற்ப ஒருங்கிணைந்த புதிய சட்டமாக டிஜிட்டல் இந்தியா சட்டத்தைக் கொண்டு வர மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. இதற்கான மசோதா தயாரிக்கப்பட்டு வரும் நிலையில், இந்த சட்ட வரைவு அடுத்த மாதம் முதல் வாரத்தில் வெளியிடப்படும் என மத்திய மந்திரி ராஜீவ் சந்திரசேகர் தெரிவித்துள்ளார்.
தகவல் தொழில்நுட்ப சட்டம் 2000 மற்றும் அச்சட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட திருத்தங்கள் ஆகியவற்றின் அடிப்படையில் தற்போது இந்திய தகவல் தொழில்நுட்பம் சார்ந்த விஷயங்கள் கையாளப்பட்டு வருகின்றன. இந்நிலையில் டிஜிட்டல் இந்தியா சட்டத்தை வரும் குளிர்காலக் கூட்டத் தொடரில் நிறைவேற்றவும், அதன் பிறகு இந்த சட்டத்தை இந்த ஆண்டே நடைமுறைக்குக் கொண்டு வரவும் அரசு திட்டமிட்டுள்ளதாக மத்திய மந்திரி ராஜீவ் சந்திரசேகர் தெரிவித்துள்ளார்.