ஊக்கமருந்து குற்றச்சாட்டு - தமிழக தடகள வீராங்கனைக்கு 3 ஆண்டுகள் தடை
|காமன்வெல்த் போட்டியில் ஊக்கமருந்து பயன்படுத்தியதாக குற்றம் சாட்டப்பட்ட நிலையில் தமிழக தடகள வீராங்கனை தனலட்சுமிக்கு 3 ஆண்டுகள் தடை விதிக்கப்பட்டுள்ளது.
சென்னை,
2022 ஆம் ஆண்டுக்கான காமன்வெல்த் போட்டிகள் இங்கிலாந்தில் பிர்மிங்காஹாமில் கடந்த 28 ஆம் தேதி முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது.
காமன்வெல்த் விளையாட்டில் நீண்ட நாட்களுக்கு பிறகு மகளிர் கிரிக்கெட் இணைக்கப்பட்டுள்ளது. இந்தியா அதிகளவில் பதக்கங்களை வாரிக் குவிக்கும் துப்பாக்கி சுடுதல் போட்டி இம்முறை நீக்கப்பட்டு இருக்கிறது.
இந்த நிலையில், காமன்வெல்த் தடகள போட்டியில் பங்கேற்பதற்காக இந்தியா 36 வீரர், வீராங்கனைகள் கொண்ட குழுவை அறிவித்தது. 72 நாடுகள் பங்கேற்று இருக்கும் இந்த போட்டிகளில் இந்தியா இதுவரை 3 தங்கம், 3 வெள்ளி, 3 வெண்கல பதக்கங்களை வென்று இருக்கிறது. இந்த காமன்வெல்த் தொடரில் 200 மீட்டர் தடகளம் மற்றும், ரிலே போட்டியில் தமிழக வீராங்கனை தனலட்சுமி சேகர் கலந்துகொள்ள இருந்தார்.
இந்த நிலையில், காமன்வெல்த் தொடருக்கு முன்பாக அனைத்து நாடுகளின் வீரர் மற்றும் வீராங்கனைகளின் ரத்த மாதிரிகள் சேகரிக்கப்பட்டு, பரிசோதனை நடத்தப்பட்டது. இதில் தனலட்சுமி சேகர் தடை செய்யப்பட்ட மருந்தை பயன்படுத்தியது சோதனையில் தெரியவந்தது. இதையடுத்து காமன்வெல்த் போட்டியிலிருந்து அவர் நீக்கப்பட்டார்.
ஊக்கமருந்து பயன்படுத்தியது உறுதி செய்யப்பட்டதை தொடர்ந்து அவருக்கு 4 ஆண்டுகள் தடை விதிக்கப்பட்டு இருந்தது. இந்த நிலையில் அவர் தனது தவறை ஒப்புக்கொண்டதாக கூறி அவருக்கு விதிக்கப்பட்ட தடை 3 ஆண்டுகளாக குறைக்கப்பட்டு இருக்கிறது. தமிழக தடகள வீராங்கனை தனலட்சுமி, தொடர்ந்து தேசிய அளவில் பல்வேறு சாதனைகளை படைத்து இருக்கிறார்.
கடந்த ஆண்டு நடைபெற்ற தேசிய ஃபெடரேஷன் கோப்பை தொடரில் தனலட்சுமி 200 மீட்டர் தூரத்தை 23 புள்ளி 26 விநாடிகளில் கடந்து சாதனை படைத்தார். இதன் மூலம் 23 ஆண்டுகள் பி.டி. உஷாவின் சாதனையை தனலட்சுமி தகர்த்து எறிந்தார். அந்த தொடரில் ஹிமா தாஸ், டுடி சந்த் ஆகிய 2 நட்சத்திர வீராங்கனைகளையும் தனலட்சுமி வீழ்த்தினார்.
தமிழக தடகள வீரர் மகிமைராஜ் 4 ஆண்டுகள் போட்டிகளில் பங்கேற்க தடை விதிக்கப்பட்டுள்ளது.