< Back
தேசிய செய்திகள்
பெங்களூரு விதானசவுதாவில் வாஸ்து சரியில்லை என கூறி மூடப்பட்ட முதல்-மந்திரி அலுவலக தெற்கு கதவு திறப்பு; சித்தராமையா அதிரடி நடவடிக்கை
தேசிய செய்திகள்

பெங்களூரு விதானசவுதாவில் வாஸ்து சரியில்லை என கூறி மூடப்பட்ட முதல்-மந்திரி அலுவலக தெற்கு கதவு திறப்பு; சித்தராமையா அதிரடி நடவடிக்கை

தினத்தந்தி
|
24 Jun 2023 9:55 PM GMT

பெங்களூரு விதானசவுதாவில் வாஸ்து சரியில்லை என கூறி மூடப்பட்ட முதல்-மந்திரி அலுவலகத்தின் தெற்கு கதவு, சித்தராமையாவின் அதிரடி உத்தரவால் திறக்கப்பட்டது.

பெங்களூரு:

பெங்களூரு விதானசவுதாவில் வாஸ்து சரியில்லை என கூறி மூடப்பட்ட முதல்-மந்திரி அலுவலகத்தின் தெற்கு கதவு, சித்தராமையாவின் அதிரடி உத்தரவால் திறக்கப்பட்டது.

வாஸ்து காரணத்தால் மூடல்

காங்கிரஸ் ஆட்சியில் அன்னபாக்ய திட்டத்தின் கீழ் பி.பி.எல். அட்டைதாரர்களுக்கு 10 கிலோ அரிசி வழங்கும் திட்டம் குறித்து நேற்று மதியம் பெங்களூரு விதானசவுதாவில் அரசு அதிகாரிகளுடன், முதல்-மந்திரி சித்தராமையா ஆலோசனை நடத்தினார். இந்த ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்க விதானசவுதாவில் உள்ள தன்னுடைய அலுவலகத்திற்கு சித்தராமையா வருகை தந்தார்.

அப்போது முதல்-மந்திரி அலுவலகத்திற்குள் செல்வதற்காக அமைக்கப்பட்டு இருந்த தெற்கு பகுதி கதவு பூட்டப்பட்டு கிடந்தது.

அதாவது முதல்-மந்திரி அலுவலகத்திற்குள் செல்ல மேற்கு நோக்கி மற்றும் தெற்கு நோக்கி என 2 நுழைவு வாயில்கள் உள்ளன. அதில் தெற்கு கதவு திறக்கப்படாமல் கடந்த 5 வருடங்களாக மூடி கிடப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்த சித்தராமையா, அந்த கதவை பூட்டி வைத்திருப்பது பற்றி அங்கிருந்த அதிகாரிகளிடம் கேட்டார். அப்போது வாஸ்து சரியில்லை என்று கூறி தெற்கு கதவை பூட்டி வைத்திருப்பதாக அதிகாரிகள் கூறினார்கள்.

கதவை திறக்க சித்தராமையா உத்தரவு

உடனே தெற்கு பகுதி கதவு முன்பாகவே முதல்-மந்திரி சித்தராமையா நின்று கொண்டார். பின்னர் அங்கிருந்த அதிகாரிகளை அழைத்து, தெற்கு கதவை திறக்கும்படி முதல்-மந்திரி சித்தராமையா அதிரடி உத்தரவு பிறப்பித்தார். அதன்படி, அதிகாரிகளும் சென்று அந்த கதவை திறந்தனர். இதையடுத்து, தெற்கு பகுதி நுழைவு வாயில் வழியாகவே சித்தராமையா தனது அலுவலகத்திற்கு உள்ளே சென்றார்.

ஆலோசனை கூட்டம் முடிந்ததும் அந்த வழியாகவே அவர் வெளியே வந்தார். இதுபற்றி அதிகாரிகளிடம் அவர் கூறும் போது, 'ஆரோக்கியமான மனசு, தூய்மையான இதயம், மக்கள் மீது உண்மையான அக்கறை இருந்தால் எங்கிருந்தும் தூய்மையான காற்று உள்ளே வரும். சொல், செயல், நடை சரியாக இருந்தால் மற்றவை எல்லாம் நல்லதாகவே நடக்கும்' என்று தெரிவித்தார்.

மூடநம்பிக்கைக்கு எதிரானவர்

முதல்-மந்திரி சித்தராமையா மூட நம்பிக்கைகளுக்கு எதிரானவர் ஆவார். அதாவது முதல்-மந்திரியாக இருப்பவர் சாம்ராஜ்நகர் மாவட்டத்திற்கு சென்றால், பதவி பறி போகும் என்ற மூடநம்பிக்கை இருந்தது. ஆனால் அதை மீறி சித்தராமையா தனது ஆட்சி காலத்தில் அந்த மாவட்டத்திற்கு சென்றார். அவர் 5 ஆண்டு ஆட்சி காலத்தையும் பூர்த்தி செய்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்