மகாவிஷ்ணுவின் 11-வது அவதாரமாக மாற நினைக்கிறார் பிரதமர் மோடி - கடுமையாக சாடிய மல்லிகார்ஜுன கார்கே
|மக்களவைத் தேர்தலில் மதத்தின் பெயரால் பா.ஜனதாவை வெற்றி பெற அனுமதிக்க கூடாது என்று மக்களிடம் கார்கே வேண்டுகோள் விடுத்துள்ளார்.
டேராடூன்,
மகாவிஷ்ணுவின் 11வது அவதாரமாக மாற பிரதமர் நரேந்திர மோடி முயற்சிப்பதாக காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே கடுமையாக சாடியுள்ளார்.
உத்தரகாண்டில் காங்கிரஸ் கட்சியின் மக்களவை பிரச்சார பேரணியை தொடங்கி வைத்த அவர், அங்குள்ள பன்னு பள்ளி மைதானத்தில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றினார்.
அப்போது அவர் பேசுகையில், "'காங்கிரஸ் தலைவர்கள் இந்த நாட்டுக்காக எத்தனையோ தியாகங்களைச் செய்துள்ளனர். பா.ஜனதா இந்நாட்டுக்காக என்ன தியாகம் செய்தது...? மதத்தின் பெயரால் பா.ஜனதாவை வெற்றிபெற அனுமதிக்கக்கூடாது.
இந்தியாவின் ஒற்றுமைக்காக இந்திரா காந்தியும், ராஜீவ் காந்தியும் தங்கள் உயிரைத் தியாகம் செய்தனர். மகாத்மா காந்தியும், நேருவும் இந்திய விடுதலைக்காக பல ஆண்டுகளை சிறையில் கழித்தனர். பா.ஜனதா இந்தியாவுக்காக என்ன செய்தது" என்று அவர் கேள்வி எழுப்பினார்.