< Back
தேசிய செய்திகள்
சாவர்க்கர் குறித்து அவதூறாக பேசக்கூடாது - ராகுல் காந்திக்கு நவநிர்மாண் சேனா எச்சரிக்கை
தேசிய செய்திகள்

'சாவர்க்கர் குறித்து அவதூறாக பேசக்கூடாது' - ராகுல் காந்திக்கு நவநிர்மாண் சேனா எச்சரிக்கை

தினத்தந்தி
|
13 March 2024 5:39 PM IST

சாவர்க்கர் குறித்து அவதூறாக பேசினால் பொறுத்துக் கொள்ள மாட்டோம் என நவநிர்மாண் சேனா தெரிவித்துள்ளது.

மும்பை,

காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, மணிப்பூர் முதல் மும்பை வரை 'இந்திய ஒற்றுமை நியாய யாத்திரை' மேற்கொண்டு வருகிறார். இந்த யாத்திரையின் கடைசி நாளில் மும்பையில் பேரணி நடத்துவதற்கு காங்கிரஸ் திட்டமிட்டுள்ளது.

இதன்படி மும்பையில் உள்ள தாதர் வெஸ்ட் பகுதியில் சாவர்க்கர் நினைவிடத்திற்கு எதிரே அமைந்துள்ள சத்ரபதி சிவாஜி பூங்காவில் பேரணி நடத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில், பேரணியின்போது சாவர்க்கர் குறித்து அவதூறான கருத்துக்களை ராகுல் காந்தி பேசக்கூடாது என ராஜ் தாக்கரே தலைமையிலான மராட்டிய நவநிர்மாண் சேனா எச்சரிக்கை விடுத்துள்ளது.

இது குறித்து நவநிர்மாண் சேனாவின் செய்தி தொடர்பாளர் சந்தீப் தேஷ்பாண்டே கூறுகையில், "சாவர்க்கருக்கு எதிராக ராகுல் காந்தி அவதூறான கருத்துக்களை தெரிவித்தால், மராட்டிய மாநிலத்தில் உள்ள 14 கோடி மக்களும் அவரை மாநிலத்தின் எந்த பகுதிக்கும் செல்ல அனுமதிக்க மாட்டார்கள். ராகுல் காந்தியின் பேரணிக்கு நாங்கள் எதிர்ப்பு தெரிவிக்க மாட்டோம். அதே சமயம் சாவர்க்கர் குறித்து அவதூறாக பேசினால் பொறுத்துக் கொள்ள மாட்டோம்" என்று தெரிவித்தார்.

மேலும் செய்திகள்