அறிவை நன்கொடையாக அளிப்பவர்கள் உன்னத பணி செய்பவர்கள்: பிரதமர் மோடி உரை
|அறிவை நன்கொடையாக அளிப்பவர்கள் உன்னத பணி செய்பவர்கள் என்று பிரதமர் மோடி குறிப்பிட்டு உள்ளார்.
புதுடெல்லி,
பிரதமர் மோடி ஒவ்வொரு மாத கடைசி ஞாயிற்று கிழமைகளில் வானொலி வழியே மன் கி பாத் நிகழ்ச்சியில் மக்களுடன் உரையாற்றி வருகிறார். அதில், பல நல்ல விசயங்களை பகிர்ந்து வருகிறார். இதன்படி இந்த மாதத்திற்கான மன் கி பாத் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி இன்று காலை கலந்து கொண்டு பேசினார். இது 95-வது நிகழ்ச்சி ஆகும்.
இந்த நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் மோடி, 100-வது மன் கி பாத் நிகழ்ச்சியை நோக்கி நாம் சென்று கொண்டிருக்கிறோம். நாட்டு மக்களுடன் தொடர்பு கொள்வதற்கான முக்கிய நிகழ்ச்சியாக இது உள்ளது என கூறி தொடக்க உரையாற்றினார்.
இதன்பின்பு தொடர்ந்து இந்த நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் மோடி, உத்தர பிரதேசம் மற்றும் ஜார்க்கண்டை சேர்ந்த இரண்டு பேரை குறிப்பிட்டு அவர்களை பாராட்டி பேசினார்.
அவர்களில் உத்தர பிரதேசத்தின் லக்னோ நகரை சேர்ந்த ஹர்தோய் கிராமத்தில் வசிக்கும் ஜதீன் லலித் சிங் என்பவர் 2 ஆண்டுகளுக்கு முன் சமூக நூலகம் ஒன்றை தொடங்கி செயல்படுத்தி வருகிறார்.
இதேபோன்று ஜார்க்கண்டை சேர்ந்த சஞ்சய் காஷ்யப் என்பவர் நூலக மனிதன் என குழந்தைகளிடையே அறியப்படுகிறார். இவர் பணி இடமாற்றம் செய்யப்படும் போதெல்லாம் அந்த பகுதியில் நூலகம் தொடங்கி வந்திருக்கிறார்.
இவர்கள் இருவரையும் குறிப்பிட்டு பேசிய பிரதமர் மோடி, யாரேனும் அறிவை நன்கொடையாக அளிக்கிறார்கள் என்றால், சமூக நலன் சார்ந்த உன்னத பணியை அவர்கள் செய்கின்றனர். நாடு முழுவதும் இன்று இதுபோன்ற முயற்சிகள் மேற்கொள்ளப்படுவது எனக்கு பெருமகிழ்ச்சியை அளிக்கிறது என கூறியுள்ளார்.
லலித் சிங்கின் நூலகத்தில் இந்தி மற்றும் ஆங்கில இலக்கியம், கணினி, சட்டம் மற்றும் அரசு தேர்வுகளுக்கான பல புத்தகங்கள் என 3 ஆயிரம் புத்தகங்கள் உள்ளன. கிராமத்தில் இருந்து தினசரி வரக்கூடிய 80 குழந்தைகள் விளையாடுவதுடன், நூலகத்தில் படிக்கவும் செய்கின்றனர் என பிரதமர் மோடி குறிப்பிட்டு உள்ளார்.
இதேபோன்று சஞ்சய், ஜார்க்கண்டின் பல மாவட்டங்களில் ஏழை மற்றும் பழங்குடியின மக்கள் நலன்களுக்காக நூலகங்களை திறந்து உள்ளார். இது இன்று ஒரு சமூக இயக்க வடிவம் பெற்றுள்ளது என பிரதமர் மோடி குறிப்பிட்டு உள்ளார்.