< Back
தேசிய செய்திகள்
மந்திரவாதியின் பேச்சை நம்பி பணிப்பெண்ணை நிர்வாணப்படுத்தி சித்திரவதை செய்த உரிமையாளர்...!
தேசிய செய்திகள்

மந்திரவாதியின் பேச்சை நம்பி பணிப்பெண்ணை நிர்வாணப்படுத்தி சித்திரவதை செய்த உரிமையாளர்...!

தினத்தந்தி
|
16 Aug 2022 4:22 PM IST

டெல்லியில், நகைகள் திருடியதாகக் கூறி, பணிப்பெண்ணை கயிற்றால் கட்டியும், நிர்வாணமாகவும் சித்திரவதை செய்த புகாரில், வீட்டின் உரிமையாளர் கைது செய்யப்பட்டார்.

புதுடெல்லி,

டெல்லியின் மைதான்கார்கி பகுதியில் ஒரு பெரிய பங்களா வீடு அமைந்துள்ளது. அந்த வீட்டில் சுமார் 10க்கும் மேற்பட்டவர்கள் வேலை செய்து வருகிறார்கள். இந்தச் சூழலில் கடந்த சில மாதங்களுக்கு முன்பாக அந்த வீட்டில் நகை மற்றும் பணம் திருடு போனது. இதை கண்டுபிடிக்க அந்த வீட்டின் உரிமையாளரான 28 வயது பெண் பல்வேறு வழிகளில் முயற்சி செய்துள்ளார்.

அதன் ஒருபகுதியாக கடந்த 8-ஆம் தேதி அவர் வீட்டிற்கு ஒரு மந்திரவாதி ஒருவரை அழைத்துள்ளார். அவர் வீட்டிற்கு வந்து வீட்டில் இருந்த அனைத்து பணியாளர்களுக்கும் உணவில் சில பொருட்களை கலந்து கொடுத்ததாக கூறப்படுகிறது.

அப்போது அந்த உணவை சாப்பிட்டு யாருடைய முகம் சிவப்பாக மாறுகிறதோ அவர்கள்தான் அந்த நகை மற்றும் பணத்தை எடுத்துள்ளதாக அந்த மந்திரவாதி தெரிவித்துள்ளதாக தெரிகிறது.

இதைத் தொடர்ந்து அங்கு இருந்த 45 வயது மிக்க பணியாளர் பெண் ஒருவரின் முகம் சிவப்பாக மாறியுள்ளதாக கூறப்படுகிறது. அதன்பின்னர் அந்தப் பெண்ணை பிடித்து வீட்டின் உரிமையாளர் பலமாக தாக்கியுள்ளதாக தெரிகிறது. மேலும் அந்தப் பணி பெண்ணை ஒரு தனி அறையில் அடைத்து வைத்துள்ளதாக தெரிகிறது. அத்துடன் அந்தப் பெண்ணை தொடர்ந்து சித்திரவதை செய்து வந்ததாக கண்டறியப்பட்டுள்ளது.

அதன் ஒரு பகுதியாக அந்தப் பெண்ணை நிர்வாணப்படுத்தி அவரை வீட்டில் இருந்த நபர்கள் அனைவரும் தாக்கியதாக தெரிகிறது. இந்த தாக்குதலுக்கு பிறகு அப்பெண் அந்த அறையில் இருந்த எலி மருந்து ஒன்றை சாப்பிட்டு மயங்கியுள்ளார். இதைத் தொடர்ந்து அந்தப் பெண் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். அங்கு அவரை மருத்துவர்கள் பரிசோதனை செய்துவிட்டு உரிய சிகிச்சை அளித்து வருகின்றனர்.

அதைத் தொடர்ந்து இந்தப் பெண் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்தப் புகாரைத் தொடர்ந்து காவல்துறையினர் வீட்டின் உரிமையாளரான 28 வயது மதிக்க தக்க பெண்ணை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

வீட்டிற்கு வேலை பார்க்க வந்த பெண் ஒருவரை உரிமையாளர் நிர்வாணப்படுத்தி சித்திரவதை செய்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் செய்திகள்