தனியார் என்ஜினீயரிங் கல்லூரியில் சுற்றிய நாயை கொன்ற வார்டன்
|உடுப்பியில் கொடூர சம்பவமாக தனியார் என்ஜினீயரிங் கல்லூரியில் சுற்றிய நாயை வார்டன் தடியால் அடித்து கொன்றார்.
உடுப்பி:
உடுப்பி பந்தகல் பகுதியில் தனியார் என்ஜினீயரிங் கல்லூரி உள்ளது. இந்த கல்லூரியின் விடுதியில் ராஜேஷ் என்பவர் வார்டனாக உள்ளார். இந்த நிலையில், கல்லூரி விடுதியில் நாய் ஒன்று சுற்றிக் கொண்டிருந்தது. விடுதி மாணவர்கள் அந்த நாயுடன் அன்போடு பழகி வந்தனர். இது வார்டன் ராஜேசுக்கு பிடிக்கவில்லை. இந்த நிலையில், விடுதியின் வளாகத்தில் சுற்றித்திரிந்த அந்த நாயை, ராஜேஷ், தடியால் தாக்கி உள்ளார். இதில் அந்த நாய் பரிதாபமாக செத்தது. பின்னர் அந்த நாயை வெளியே தூக்கி வீசியதாக தெரிகிறது. இதனை கல்லூரி மாணவர் ஒருவர், தனது செல்போனில் வீடியோ எடுத்து சமூக வலைத்தளில் வெளியிட்டுள்ளார். அந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
இந்த நிலையில் விடுதி வார்டனின் மனிதாபிமானமற்ற சம்பவத்துக்கு பல்வேறு தரப்பினரும் கடும் கண்டனம் தெரிவித்து வருகிறார்கள். இதையடுத்து வார்டன் ராஜேஷ் மீது சிர்வா போலீசில் புகார் அளிக்கப்பட்டது. அதன்பேரில் போலீசார் 2 பிரிவுகளின் கீழ் விடுதி வார்டன் ராஜேஷ் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.