< Back
தேசிய செய்திகள்
எந்த தலைவரும் வெளிநாட்டில் சொந்த நாட்டை விமர்சிப்பதை ஏற்க முடியாது; ராகுல் காந்திக்கு அமித்ஷா கண்டனம்
தேசிய செய்திகள்

எந்த தலைவரும் வெளிநாட்டில் சொந்த நாட்டை விமர்சிப்பதை ஏற்க முடியாது; ராகுல் காந்திக்கு அமித்ஷா கண்டனம்

தினத்தந்தி
|
10 Jun 2023 10:22 PM IST

எந்த தலைவரும் சொநத நாட்டை வெளிநாட்டில் விமர்சிப்பதை ஏற்க முடியாது என ராகுல் காந்திக்கு அமித்ஷா கண்டனம் தெரிவித்துள்ளார்.

ராகுல் காந்தி விமர்சனம்

காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி சமீபத்தில் அமெரிக்காவில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு பேசினார். அப்போது மத்திய அரசின் செயல்பாடுகளை அங்கு கடுமையாக விமர்சித்தார்.ராகுல் காந்தியின் இந்த கருத்துகளுக்கு மத்திய பா.ஜனதா தலைவர்கள் தொடர்ந்து எதிர்ப்புகளை தெரிவித்து வருகின்றனர். அந்தவகையில் உள்துறை மந்திரி அமித்ஷாவும் கடும் கண்டனம் தெரிவித்து உள்ளார்.

பிரதமர் மோடியின் 9 ஆண்டுகால ஆட்சி நிறைவையொட்டி குஜராத்தின் படான் மாவட்டத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பொதுக்கூட்டம் ஒன்றில் பேசும்போது இது தொடர்பாக அவர் கூறியதாவது:-

முன்னோரிடம் கற்க வேண்டும்

கோடை வெயிலில் இருந்து தப்புவதற்காக ராகுல் பாபா (ராகுல் காந்தி) வெளிநாடு செல்கிறார். அங்கு இந்தியாவை விமர்சிப்பதையே வழக்கமாக கொண்டுள்ளார். இந்த விவகாரத்தில் தனது முன்னோரிடம் இருந்து அவர் கற்றுக்கொள்ள வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்.எந்தவொரு தேசப்பற்று மிகுந்தவரும் இந்திய அரசியலை இந்தியாவுக்குள்ளேதான் விவாதிக்க வேண்டும். எந்தவொரு தலைவரும் வெளிநாடுகளில் இந்தியாவை விமர்சிப்பதும், இந்திய அரசியலை விவாதிப்பதும் ஏற்க முடியாது. இதை இந்திய மக்கள் உன்னிப்பாக கவனிக்கிறார்கள் என்பதை ராகுல் காந்தி நினைவில் கொள்ள வேண்டும்.பிரதமர் மோடி ஆட்சியில் இந்தியா மிகப்பெரும் மாற்றத்தை கண்டுள்ளது. ஆனால் இந்தியாவுக்கு எதிரான விஷங்களை பேசுவதை காங்கிரஸ் நிறுத்தவில்லை.

தமிழகத்தின் வரலாற்று சிறப்பு மிக்க செங்கோலை நாடாளுமன்றத்தில் நிறுவியதை நீங்கள் எதிர்த்தீர்கள். இந்த செங்கோல் நேருவால் நிறுவப்பட இருந்தது. ஆனால் அவர் செய்யாததை பிரதமர் மோடி செய்திருக்கிறார். நீங்கள் ஏன் எதிர்க்கிறீர்கள்?

வளர்ச்சிக்கான புதிய சகாப்தம்

பாபர் காலத்தில் இருந்தே அயோத்தியில் ராமர் கோவில் இழிவுபடுத்தப்பட்டது. ஆனால் இன்று, அங்கு பிரமாண்டமான ராமர் கோவில் கட்டப்பட்டு வருகிறது. விரைவில் அது திறக்கப்படும். நாட்டின் வளர்ச்சிக்கான ஒரு புதிய சகாப்தத்தை குஜராத்தில் இருந்து நரேந்திர மோடி தொடங்கினார். 2002 முதல் 2014-ம் ஆண்டு வரை குஜராத்தில் மின்சாரம், தண்ணீர், தடுப்பணை, பண்ணை மற்றும் பெண்கல்வி என அனைத்து துறைகளின் வளர்ச்சி மோடியை பிரதமராக்க உதவியது. மேலும் 'குஜராத் மாடல்' இந்தியா மாடலாக மாறியது. நான் செல்லும் இடங்களில் எல்லாம் பிரதமர் மோடிக்கான ஆதரவை பார்க்கிறேன். குஜராத்தில் உள்ள 26 தொகுதிகளிலும் பா.ஜனதா 3-வது முறையாக வெற்றி பெறுவதை உறுதி செய்ய வேண்டும் என்று குஜராத் மக்களை கேட்டுக்கொள்கிறேன்.

இவ்வாறு அமித்ஷா கூறினார்.

மேலும் செய்திகள்