< Back
தேசிய செய்திகள்
டாக்டர்கள் எதிர்ப்பு எதிரொலி; எம்.பி.க்களுக்கு சலுகை அளிக்கும் எய்ம்ஸ் உத்தரவு வாபஸ்
தேசிய செய்திகள்

டாக்டர்கள் எதிர்ப்பு எதிரொலி; எம்.பி.க்களுக்கு சலுகை அளிக்கும் 'எய்ம்ஸ்' உத்தரவு வாபஸ்

தினத்தந்தி
|
22 Oct 2022 1:54 AM IST

டாக்டர்கள் எதிர்ப்பை தொடர்ந்து, எம்.பி.க்களுக்கு சிறப்பு சலுகை அளிக்கும் வழிகாட்டு நெறிமுறைகளை ‘எய்ம்ஸ்’ நிர்வாகம் வாபஸ் பெற்றது.

24 மணி நேரமும் அதிகாரி உதவி

டெல்லியில் உள்ள 'எய்ம்ஸ்' ஆஸ்பத்திரியில் எம்.பி.க்கள் சிகிச்சை பெறுவது தொடர்பாக எய்ம்ஸ் நிர்வாகம் கடந்த 17-ந் தேதி சிறப்பு வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டது. மக்களவை செயலகத்தின் இணை செயலாளருக்கு எழுதிய கடிதத்தில் எய்ம்ஸ் இயக்குனர் சீனிவாஸ் இதை தெரிவித்து இருந்தார்.

அதில் கூறப்பட்டு இருந்ததாவது:-

எய்ம்ஸ் ஆஸ்பத்திரியில் எம்.பி.க்கள் சிகிச்சை தொடர்பான பணிகளை ஒருங்கிணைத்து வழிகாட்ட ஒரு சிறப்பு மருத்துவ அதிகாரி 24 மணி நேரமும் செயல்படுவார். அவரை எம்.பி.க்களின் உதவியாளர்கள் தொடர்பு கொண்டால், அவர்களுக்காக சிறப்பு மருத்துவ நிபுணர்களை மருத்துவ அதிகாரி தொடர்பு ெகாண்டு நேர ஒதுக்கீடு பெற்றுத் தருவார்.

அவசர சிகிச்சைக்கு வந்தால், அதற்கும் மருத்துவ அதிகாரி வழிகாட்டுவார்.

இவ்வாறு அதில் கூறப்பட்டு இருந்தது.

டாக்டர்கள் எதிர்ப்பு

இந்த நடைமுறைக்கு பல்வேறு டாக்டர்கள் சங்கங்கள் எதிர்ப்பு தெரிவித்தன. இது வி.ஐ.பி. கலாசாரத்தை ஊக்குவிப்பதாகவும், சாதாரண நோயாளிகளை புறக்கணித்து, எம்.பி.க்களுக்கு சிறப்பு சலுகை அளிக்கப்படுவதாகவும் கண்டனம் தெரிவித்தன.

மேலும், மத்திய சுகாதாரத்துறை மந்திரி மன்சுக் மாண்டவியா தலையிடக்கோரி கடிதம் எழுதின.

வாபஸ்

இதையடுத்து, சர்ச்சைக்குரிய அந்த கடிதமும், வழிகாட்டு நெறிமுறைகளும் உடனடியாக வாபஸ் பெறப்படுவதாக எய்ம்ஸ் தலைமை நிர்வாக அதிகாரி தியோநாத் சா நேற்று கூறினார்.

இதை டாக்டர்கள் சங்கங்கள் வரவேற்றுள்ளன. வி.ஐ.பி. கலாசாரத்துக்கு எதிரான தங்கள் போராட்டத்துக்கு வெற்றி கிடைத்திருப்பதாக அந்த சங்கங்கள் தெரிவித்தன.

மேலும் செய்திகள்