தேசிய செய்திகள்
பெண் டாக்டர் கொலை: சிபிஐ முன் மீண்டும் ஆஜரான மருத்துவமனை முன்னாள் முதல்வர்
தேசிய செய்திகள்

பெண் டாக்டர் கொலை: சிபிஐ முன் மீண்டும் ஆஜரான மருத்துவமனை முன்னாள் முதல்வர்

தினத்தந்தி
|
17 Aug 2024 1:28 PM IST

பெண் டாக்டர் கொலை செய்யப்பட்ட மருத்துவமனையின் முன்னாள் முதல்வர் நேற்று சிபிஐ முன்பு ஆஜராகி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

கொல்கத்தா,

மேற்கு வங்காளத்தில் கொல்கத்தா நகரின் வடபகுதியில் ஆர்.ஜி. கார் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் பணியாற்றிய 31 வயது பயிற்சி பெண் டாக்டர் ஒருவர், கடந்த 9-ந்தேதி அதிகாலையில் பலாத்காரம் செய்யப்பட்டு, பின்னர் கொடூர கொலை செய்யப்பட்டு உள்ளார். அரை நிர்வாண கோலத்தில் உயிரிழந்த நிலையில் அவருடைய உடல் கண்டெடுக்கப்பட்டது.

அந்த பெண் டாக்டரின் 4 பக்க பிரேத பரிசோதனை அறிக்கையில், அவர் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளானது உறுதியாகி இருந்தது. அவரின் அந்தரங்க உறுப்புகள், வாய் உள்ளிட்ட பகுதிகளில் ரத்தம் வடிந்துள்ளது என்றும் பல்வேறு பகுதிகளில் காயங்கள் ஏற்பட்டு உள்ளன என்பதும் தெரிய வந்துள்ளது.

இந்த சம்பவத்தில் சஞ்சய் ராய் என்பவரை போலீசார் கைது செய்தனர். அவர், 23-ந்தேதி வரை போலீஸ் காவலில் வைக்கப்பட்டு உள்ளார். இதனை தொடர்ந்து, பல்வேறு பகுதிகளிலும் பயிற்சி டாக்டர்கள் கூட்டமைப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதையடுத்து போலீசாரிடம் இருந்து வழக்கு விசாரணை சி.பி.ஐ.யிடம் ஒப்படைக்கப்பட்டது. இந்த சம்பவத்தில் கொல்கத்தாவில் உள்ள சி.பி.ஐ.யின் சிறப்பு குற்ற பிரிவினர், விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில், மருத்துவமனையின் முன்னாள் முதல்வர் டாக்டர் சந்தீப் கோஷ் மீண்டும் 2வது முறையாக இன்று காலை 10.30 மணிக்கு சிபிஐ முன் ஆஜரானார். இதற்கு முன்னதாக, அவர் நேற்று சிபிஐ அலுவலகத்தில் ஆஜராகி அவர்களது கேள்விகளுக்கு பதில் அளித்துள்ளார். நேற்று இரவு 9.30 மணி வரை சிபிஐயின் அலுவலகத்தில் உள்ள அறையில் அமர வைக்கப்பட்டிருந்தார். பிறகு நள்ளிரவில் விசாரணை தொடங்கி இன்று அதிகாலை 3 மணி வரை நீடித்தது. அந்த விசாரணையில், பாதிக்கப்பட்ட பெண் டாக்டர் தொடர்ந்து 36 மணிநேரம் அல்லது சில சமயங்களில் 48 மணிநேரம் கூட பணியில் அமர்த்தப்படுவதைக் காணும் வாராந்திரப் பட்டியல் குறித்தும் அவரிடம் கேள்வி கேட்கப்பட்டதாக அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

பெண் டாக்டர் கொலை செய்யப்பட்டு உடல் கண்ணெடுக்கப்பட்ட 2 நாட்களுக்கு பிறகு மருத்துவமனையின் முதல்வர் சந்தீப் கோஷ் தனது பதிவியை ராஜினாமா செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்