< Back
தேசிய செய்திகள்
இஸ்ரேல், ஈரானுக்கு பயணம் செய்ய வேண்டாம் - மத்திய அரசு அறிவுறுத்தல்
தேசிய செய்திகள்

'இஸ்ரேல், ஈரானுக்கு பயணம் செய்ய வேண்டாம்' - மத்திய அரசு அறிவுறுத்தல்

தினத்தந்தி
|
12 April 2024 1:19 PM GMT

மறு அறிவிப்பு வரும் இந்தியர்கள் ஈரான் மற்றும் இஸ்ரேலுக்குச் செல்ல வேண்டாம் என மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது.

புதுடெல்லி,

சிரியாவில் உள்ள ஈரான் தூதரகம் மீது சமீபத்தில் நிகழ்த்தப்பட்ட தாக்குதலுக்கு இஸ்ரேல் அரசு மீது ஈரான் குற்றம் சுமத்தியது. இதனால் ஈரான் மற்றும் இஸ்ரேல் இடையே போர் பதற்றம் நிலவி வருகிறது. இஸ்ரேல் மீது விரைவில் ஈரான் தாக்குதல் நடத்த வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் இந்தியர்கள் இஸ்ரேல் மற்றும் ஈரான் ஆகிய நாடுகளுக்கு பயணம் செய்வதை தவிர்க்குமாறு இந்திய அரசு அறிவுறுத்தியுள்ளது. இது தொடர்பாக மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது;-

"தற்போது நிலவி வரும் சூழ்நிலையை கருத்தில் கொண்டு, மறு அறிவிப்பு வரும் வரை அனைத்து இந்தியர்களும் ஈரான் மற்றும் இஸ்ரேலுக்குச் செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறார்கள். தற்போது ஈரான் மற்றும் இஸ்ரேலில் வசிக்கும் இந்தியர்கள் அங்குள்ள இந்திய தூதரகங்களை தொடர்பு கொண்டு தங்கள் இருப்பிடத்தை பதிவு செய்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

அங்குள்ள இந்தியர்கள் தங்கள் பாதுகாப்பு தொடர்பாக மிகுந்த முன்னெச்சரிக்கையுடன் செயல்பட வேண்டும் எனவும், முடிந்தவரை வெளியில் செல்வதை குறைத்துக்கொள்ள வேண்டும் என்றும் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்."

இவ்வாறு மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

மேலும் செய்திகள்