கிறிஸ்துமஸ், புத்தாண்டு கொண்டாட்டத்துக்காக நாடாளுமன்ற கூட்டத்தொடரை முன்கூட்டியே முடிக்க வேண்டும் தி.மு.க. வலியுறுத்தல்
|நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் இன்று (புதன்கிழமை) தொடங்குகிறது.
புதுடெல்லி,
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் இன்று (புதன்கிழமை) தொடங்குகிறது. இதனை முன்னிட்டு அனைத்து கட்சி கூட்டம் பாதுகாப்புத்துறை மந்திரி ராஜ்நாத்சிங் தலைமையில் நாடாளுமன்ற வளாகத்தில் நேற்று நடைபெற்றது. கூட்டத்தில் பல்வேறு கட்சிகளின் தலைவர்கள் கலந்து கொண்டனர். தி.மு.க. சார்பில் நாடாளுமன்ற தி.மு.க. குழு தலைவர் டி.ஆர்.பாலு, மாநிலங்களவை தி.மு.க. குழு தலைவர் திருச்சி சிவா ஆகியோர் பங்கேற்றனர்.
கூட்டம் முடிந்ததும் டி.ஆர்.பாலு நிருபர்களிடம் பேசினார். அப்போது, கூட்டத்தில் தி.மு.க. வலியுறுத்திய விஷயங்களை குறிப்பிட்டார். குறிப்பாக, சென்னை 2-ம் கட்ட திட்டத்துக்கான ஒப்புதல், பொருளாதாரத்தில் பின்தங்கிய முன்னேறிய வகுப்பினருக்கான இட ஒதுக்கீட்டை மறு ஆய்வு செய்தல், ஆன்லைன் சூதாட்டத்தை ரத்து செய்தல், விலைவாசி உயர்வை கட்டுப்படுத்துதல், வேலைவாய்ப்பு பிரச்சினை, 100 நாள் வேலை திட்ட குறைபாடுகளை நிவர்த்தி செய்தல் போன்றவற்றை வலியுறுத்தியதாக தெரிவித்தார். மேலும், கிறிஸ்துமஸ், புத்தாண்டு கொண்டாட்டங்கள் டிசம்பர் 24-ந் தேதி முதல் ஜனவரி 1-ந் தேதி வரை இருக்கும் என்பதால், 29-ந் தேதி வரை நடைபெற உள்ள நாடாளுமன்ற கூட்டத்தை முன்கூட்டியே முடிக்க வேண்டும் என்றும், அந்த நாட்களுக்கான வேலைநேரத்தை கூடுதல் பணியாக எடுத்துக்கொள்ள எம்.பி.க்கள் தயாராக இருப்பதாகவும் தி.மு.க. வலியுறுத்தி உள்ளது. இதுதவிர, மத்திய அரசு கொண்டு வரவுள்ள கூட்டுறவு தொடர்பான மசோதா, காடுகள் பாதுகாப்பு திருத்த மசோதா ஆகியவற்றுக்கு எதிர்ப்பை பதிவு செய்ததாகவும் டி.ஆர்.பாலு தெரிவித்தார்.