ராமர் கோவில் பற்றிய விவாதத்தின்போது எதிர்ப்பு தெரிவித்த தி.மு.க.; மக்களவையில் சலசலப்பு
|தமிழக மீனவர்கள் கைது தொடர்புடைய விவகாரம் பற்றி விவாதிக்க வேண்டும் என வலியுறுத்தி, தி.மு.க. உறுப்பினர்கள் சிலர் இதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.
புதுடெல்லி,
உத்தர பிரதேசத்தின் அயோத்தி நகரில் பிரமாண்ட முறையில் ராமர் கோவில் கட்டப்பட்டு சமீபத்தில் கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது. இதில், நாட்டின் முக்கிய பிரமுகர்கள் பலருக்கும் முறைப்படி அழைப்பு விடப்பட்டது. மதவேற்றுமை இன்றி பல்வேறு அமைப்புகளை சேர்ந்த தலைவர்களும் இந்த கும்பாபிஷேக விழாவில் பங்கேற்றனர்.
இந்த சூழலில், நாடாளுமன்ற மக்களவையில் பா.ஜ.க. எம்.பி. சத்யபால் சிங், வரலாற்று சிறப்பு வாய்ந்த ஸ்ரீராமர் கோவில் கட்டுமானம் மற்றும் கும்பாபிஷேகம் பற்றிய விவாதம் ஒன்றை தொடங்கி வைத்து இன்று பேசினார். அவர் பேசும்போது, கடவுள் ராமர் இந்துக்கள் என்றில்லாமல் ஒவ்வொருவருக்கும் உரியவர் என்று கூறினார். சிலர் இதனை வகுப்புவாத விவகாரம் ஆக்குகின்றனர் என்றும் சுட்டி காட்டினார்.
ராமர் இருந்திருக்கிறாரா? என காங்கிரஸ் கட்சி கேள்வி எழுப்பி வருகிறது என்ற குற்றச்சாட்டையும் முன்னாள் ஐ.பி.எஸ். அதிகாரியான சிங் கூறினார். இதனை தொடர்ந்து, எதிர்க்கட்சிகள் வரிசையில் இருந்து இதற்கு கடுமையான எதிர்ப்பு வந்தது. தமிழக மீனவர்கள் கைது தொடர்புடைய விவகாரம் பற்றி விவாதிக்க வேண்டும் என வலியுறுத்தி, தி.மு.க. உறுப்பினர்கள் சிலர் இதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.