< Back
தேசிய செய்திகள்
நாடாளுமன்ற வளாகத்தில் தி.மு.க. எம்.பி.க்கள் போராட்டம்
தேசிய செய்திகள்

நாடாளுமன்ற வளாகத்தில் தி.மு.க. எம்.பி.க்கள் போராட்டம்

தினத்தந்தி
|
8 Feb 2024 11:30 AM IST

ஜனாதிபதி உரையுடன் தொடங்கிய நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் நாளை வரை நடைபெற உள்ளது.

புதுடெல்லி,

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் கடந்த மாதம் 31ம் தேதி ஜனாதிபதி திரவுபதி முர்மு உரையுடன் தொடங்கியது. இதன்பின், பிப்ரவரி 1ம் தேதி நாடாளுமன்ற மக்களவையில் மத்திய அரசின் இடைக்கால பட்ஜெட்டை நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார்.

மக்களவை தேர்தல் நடைபெற உள்ள நிலையில், இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. இந்த நாடாளுமன்ற கூட்டத்தொடர் நாளை வரை நடைபெற உள்ளது. இந்த கூட்டத்தொடரில், ஜார்கண்ட் முதல்-மந்திரி விவகாரம், சண்டிகர் மேயர் தேர்தல் மற்றும் பட்ஜெட் உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் குறித்து எதிர்க்கட்சிகள் கேள்வி எழுப்பி அமளியில் ஈடுபட்டு நாடாளுமன்றத்தில் இருந்து வெளியேறினர்.

இதையடுத்து இன்று மத்திய அரசை கண்டித்து நாடாளுமன்ற வளாகத்திற்கு வெளியே உள்ள காந்தி சிலை முன்பு தி.மு.க. எம்.பி.க்கள் கருப்பு நிற உடை அணிந்து ஆர்ப்பாட்டம் நடத்த உள்ளதாக நாடாளுமன்ற தி.மு.க. குழு தலைவர் டி.ஆர்.பாலு அறிவித்திருந்தார்.

இந்நிலையில், மத்திய அரசின் இடைக்கால பட்ஜெட்டில் தமிழ்நாட்டுக்கு போதிய நிதி ஒதுக்காததை கண்டித்தும், வெள்ள நிவாரணம் வழங்காததை கண்டித்தும் நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள காந்தி சிலை முன்பு தி.மு.க. எம்.பி.க்கள் மற்றும் கூட்டணிக் கட்சி எம்.பி.க்கள் கருப்பு நிற உடை அணிந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

மேலும் செய்திகள்