பொதுசிவில் சட்டத்திற்கு திமுக, காங்கிரஸ் எதிர்ப்பு...!
|பொதுசிவில் சட்டம் தொடர்பான நாடாளுமன்ற நிலைக்குழு கூட்டம் நடைபெற்றது.
டெல்லி,
இந்தியாவில் மதத்தின் அடிப்படையில் சிவில் சட்டங்கள் உள்ளன. திருமணம், விவாகரத்து, தத்தெடுப்பு, சொத்துரிமை உள்ளிட்ட பல்வேறு தனி நபர் உரிமைகள் தொடர்பாக அந்தந்த நபர்களின் மதத்திற்கு ஏற்ப சிவில் சட்டங்கள் உள்ளன. தனி நபர் தான் பின்பற்றும் மதத்திற்கு ஏற்றார்போல் சிவில் சட்டங்கள் உள்ளன.
இதனிடையே, நாட்டில் உள்ள அனைவருக்கும் பொதுவான சிவில் சட்டம் கொண்டுவர வேண்டும் என பல்வேறு தரப்பும் கோரிக்கை விடுத்து வந்தன. அதேபோல், பொது சிவில் சட்டத்திற்கு பலர் எதிர்ப்பும் தெரிவித்து வந்தனர்.
மத்தியில் ஆளும் பாஜக 2019 நாடாளுமன்ற தேர்தலின்போது தேர்தல் அறிக்கையில் நாட்டில் பொதுசிவில் சட்டம் கொண்டுவரப்படும் என வாக்குறுதி அளித்திருந்தது. இந்த சூழ்நிலையில் சமீபத்தில் பாட்னாவில் நடந்த கூட்டத்தில் பிரதமர் மோடி நாட்டில் பொதுசிவில் சட்டம் கொண்டுவருவது குறித்து பேசினார். வரும் நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரில் பொதுச்சிவில் சட்டம் மசோதாவை தாக்கல் செய்ய மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்த சூழ்நிலையில் பொதுசிவில் சட்டம் தொடர்பாக நாடாளுமன்ற நிலைக்குழுவின் சட்டம் மற்றும் நீதித்துறை கூட்டம் இன்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பங்கேற்க அனைத்துக்கட்சிகளுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.
இந்த கூட்டத்தில் பாஜக, காங்கிரஸ், ஆம் ஆத்மி, திமுக, அதிமுக, உள்பட நாட்டின் பெரும்பாலான கட்சிகளின் பிரதிநிதிகள் பங்கேற்றனர். தேசியவாத காங்கிரஸ், திரிணாமுல் காங்கிரஸ் உள்ளிட்ட சில கட்சிகள் இந்த கூட்டத்தில் பங்கேற்கவில்லை.
கூட்டத்தில் நாட்டில் பொதுசிவில் சட்டம் அமல்படுத்துவது தொடர்பாக கட்சிகளிடம் நாடாளுமன்ற நிலைக்குழு ஆலோசித்தது. அப்போது, பொதுசிவில் சட்டத்திற்கு காங்கிரஸ், திமுக உள்ளிட்ட கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்தன.
2024 நாடாளுமன்ற தேர்தலை கருத்தில் கொண்டே மத்திய பாஜக அரசு தற்போது நாட்டில் பொதுசிவில் சட்டத்தை அமல்படுத்துவது குறித்த விவாதத்தை எழுப்பியுள்ளதாக திமுக, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்தன.