மைசூரு விமான நிலையத்தில், சோனியா காந்திக்கு வரவேற்பு அளித்த டி.கே.சிவகுமார்..!
|ராகுல் காந்தியின் பாரத் ஜோடோ பாதயாத்திரை தற்போது கர்நாடகாவில் பயணிக்கிறது.
மைசூரு,
அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி. இவர் 'பாரத் ஜோடோ' என்ற பெயரில் பாதயாத்திரையை கடந்த மாதம்(செப்டம்பர்) 7-ந்தேதி தமிழ்நாடு கன்னியாகுமரியில் தொடங்கினார். தமிழகத்தை தொடர்ந்து கேரளாவில் 19 நாட்கள் பாதயாத்திரை நடைபெற்றது. ராகுல்காந்தியின் பாதயாத்திரை கடந்த 30-ந் தேதி கர்நாடகத்துக்குள் நுழைந்தது.
தற்போது கர்நாடகாவில் பாரத் ஜோடோ யாத்திரை தற்போது பயணிக்கிறது. இதற்கிடையில், ராகுல் காந்தியின் இந்த பாதயாத்திரையில் ஒரு நாள் மட்டும் கலந்து கொள்ள அகில இந்திய காங்கிரஸ் தலைவி சோனியா காந்தி, முடிவு செய்தார்.
இந்த நிலையில், ராகுல் காந்தியின் பாதயாத்திரையில் கலந்து கொள்வதற்காக சோனியா காந்தி டெல்லியில் இருந்து தனி விமானம் மூலம் கர்நாடகம் மாநிலம் மைசூரு விமான நிலையத்திற்கு இன்று வந்தார். விமான நிலையத்தில் கர்நாடக காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவகுமார் சோனியா காந்திக்கு பொன்னாடை அணிவித்து வரவேற்பு அளித்தார்.
சோனியா காந்தி வருகையால் கர்நாடகாவின் பாரத் ஜோடோ யாத்திரை மேலும் வலுவடைகிறது என்று டி.கே.சிவகுமார் டுவிட்டரில் தெரிவித்துள்ளார்.
வருகிற 6-ந் தேதி அவர்கள் ராகுல் காந்தியின் பாதயாத்திரையில் சோனியா காந்தி கலந்துகொள்ள இருப்பதாக கூறப்படுகிறது. சிறிது தூரம் அவர் பாதயாத்திரையில் பங்கேற்று நடப்பார் என்றும் சொல்லப்படுகிறது.