காங்கிரஸ் அதிருப்தியாளர்களுக்கு டி.கே.சிவக்குமார் எச்சரிக்கை
|காங்கிரசை ஆட்சியில் அமர்த்துவதற்காக வாயை மூடிக்கொண்டு ஒவ்வொருவரும் பணியாற்ற வேண்டும் என்று மாநில தலைவர் டி.கே.சிவக்குமார் அதிருப்தியாளர்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார்.
முதல்-மந்திரி பதவிக்கு போட்டி
கர்நாடகத்தில் அடுத்த ஆண்டு(2023) சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தலுக்கு இன்னும் 8 மாதங்கள் இருக்கும் நிலையில் காங்கிரசில் முதல்-மந்திரி பதவிக்கு எதிர்க்கட்சி தலைவர் சித்தராமையா, மாநில தலைவர் டி.கே.சிவக்குமார் இடையே கடும் போட்டி ஏற்பட்டுள்ளது. ஒக்கலிக சமுதாய மக்கள் நான் முதல்-மந்திரியாக ஆதரவு அளிக்க வேண்டும் என்று டி.கே.சிவக்குமார் கூறி இருந்தாா். இதனால் சித்தராமையாவின் ஆதரவாளர்கள் மற்றும் காங்கிரசில் உள்ள அதிருப்தியாளர்கள் டி.கே.சிவக்குமாருக்கு எதிராக பேசி வருகின்றனர்.
குறிப்பாக முன்னாள் மந்திரி ஜமீர் அகமதுகான், ஒக்கலிக சமுதாயத்தின் மூலம் டி.கே.சிவக்குமார் முதல்-மந்திரியாக விரும்பினால், அதை விட முஸ்லிம்கள் ஆதரவு காங்கிரசுக்கு அதிகம் இருப்பதால், நான் கூட முதல்-மந்திரி ஆகலாம் என்று கருத்து தெரிவித்திருந்தார். இதுகுறித்து பெங்களூருவில் நேற்று கர்நாடக மாநில காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவக்குமாரிடம் நிருபர்கள் கேள்வி எழுப்பினார்கள். இதற்கு பதிலளித்து அவர் கூறியதாவது:-
வாயை மூடிக்கொண்டு...
எனது தகுதிக்கு சமமானவர்கள் பேசுவது குறித்து மட்டுமே பேசுவேன். எனது தகுதிக்கு கீழ் இருப்பவர்கள் கூறும் கருத்துகளுக்கு பதில் சொல்ல விரும்பவில்லை. தற்போது மாநிலத்தில் முதல்-மந்திரி பதவி காலியாக இல்லை. தனிப்பட்ட நபரின் துதி பாடுவதை கைவிட்டு, காங்கிரஸ் கட்சி பற்றி மட்டும் பேசும்படி தொடர்ந்து கூறி வருகிறேன். முதலில் காங்கிரஸ் கட்சியை கர்நாடகத்தில் ஆட்சியில் அமர்த்த வேண்டும். இதற்காக வாயை மூடிக் கொண்டு ஒவ்வொருவரும் பணியாற்ற வேண்டும். கட்சியில் உள்ள அனைவருக்கும் இது பொருந்தும்.
கட்சியை வளர்க்க வேண்டும்
காங்கிரஸ் மீது உண்மையானவர்களாக இருந்தால், முதலில் கட்சியை வளர்க்க முன்வர வேண்டும். காங்கிரஸ் கட்சிக்கு அதிக மக்களை கொண்டு வந்து சேர்க்க வேண்டும். தங்களது சமுதாயத்தையும், சமுதாய மக்களையும் ஒன்றிணைத்து கட்சியை பலப்படுத்தி, காங்கிரசை ஆட்சி கட்டிலில் அமர வைக்க வேண்டும். 224 தொகுதிகளிலும் போட்டியிட்டு வெற்றி பெறுபவர்கள் முதல்-மந்திரி பதவியை எதிர்பார்ப்பதில் தவறு இல்லை. முஸ்லிம்களுக்கு எதிராக பிரமோத் முத்தாலிக் தொடர்ந்து பேசி வருகிறார்.
இது அவருடைய கருத்து இல்லை. பா.ஜனதாவினர் கூறுவதை பிரமோத் முத்தாலிக் பேசி வருகிறார். அரசியலமைப்பு சட்டத்தின்படி அனைத்து தரப்பினருக்கும் உரிய பாதுகாப்பு வழங்குவது முதல்-மந்திரியின் கடமையாகும். பழைய மைசூரு பகுதிகளில் வன்முறையை தூண்டிவிடும் விதமாக பிரமோத் முத்தாலிக் மற்றும் பா.ஜனதாவினர் பேசி வருகிறாா்கள். சோனியா காந்தியை பாதுகாக்க மாநிலம் முழுவதும் போராட்டம் நடத்தும்படி காங்கிரசாருக்கு அறிவுறுத்தி உள்ளேன். அதன்படி, எந்த பிரச்சினையும் இன்றி காங்கிரசார் போராட்டம் நடத்த வேண்டும்.
இவ்வாறு டி.கே.சிவக்குமார் கூறினார்.